

புதுடெல்லி,
அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில், சாதி மற்றும் சமுதாய அமைப்புகள், கட்ட பஞ்சாயத்தாக செயல்பட்டு, கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கின்றன.
கலப்பு திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று உத்தரவிடுவதும், அப்படி திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகளை கவுரவ கொலை செய்ய உத்தரவிடுவதும் என இந்த பஞ்சாயத்துகள் செயல்படுகின்றன. உத்தரபிரதேசத்தில் ஒரு கட்ட பஞ்சாயத்து, பெண்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது, மொபைல் போன் வைத்துக்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டது.
இப்படி செயல்படும் கட்ட பஞ்சாயத்துகளை எதிர்த்தும், கவுரவ கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும் சக்தி வாகினி என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தது.
இம்மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. கட்ட பஞ்சாயத்துகளின் கருத்துகளையும் சுப்ரீம் கோர்ட்டு கேட்டது. கட்ட பஞ்சாயத்துகளால் பெண்கள் பாதிக்கப்படுவதை போலீசால் தடுக்க முடியவில்லை என்றும், எனவே, இந்த குற்றங்களை கண்காணிக்க கோர்ட்டே ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியது.
அதைக்கேட்ட நீதிபதிகள், அரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் கட்ட பஞ்சாயத்து தீவிரமாக செயல்படும் 3 மாவட்டங்களில் நிலைமையை கண்காணிக்கப் போவதாக கூறினர். கலப்பு திருமணம் செய்துகொள்பவர்கள் மீதான தாக்குதல், முற்றிலும் சட்ட விரோதம் என்றும் அவர்கள் கூறினர். இந்த வழக்கில், கோர்ட்டுக்கு ஆலோசனை கூறுபவராக மூத்த வக்கீல் ராஜு ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்ட பஞ்சாயத்து சார்பில் ஆஜரான வக்கீல், கட்ட பஞ்சாயத்துகள், சமுதாயத்தின் மனசாட்சியாக செயல்பட்டு கடமை ஆற்றுவதாக கூறினார்.
அதைக்கேட்ட நீதிபதிகள், கட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். நீதிபதிகள் கூறியதாவது:-
வயது வந்தோருக்கு இடையே திருமணம் நடைபெறுகிறது. அது அவர்களின் சொந்த விருப்பம். திருமணம் என்பது சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட திருமணத்தை யார் அனுமதித்தாலும், தடுத்தாலும் சட்டம் தனது கடமையை செய்யும். ஒரு திருமணம் செல்லுமா? செல்லாதா? என்பதை கோர்ட்டுதான் முடிவு செய்யும்.
இதுபோன்ற விவகாரங்களில் கட்ட பஞ்சாயத்துகள் தலையிட வேலையே கிடையாது. நீங்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள முடியாது. சமுதாயத்தின் மனசாட்சியாக செயல்படக்கூடாது.
கலப்பு திருமணங்களில் கட்ட பஞ்சாயத்து அமைப்புகளின் இதுபோன்ற தலையீடுகளை தடுக்க உயர் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவை அமைப்போம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.