

ஐய்சால்:
மிசோரம் மாநிலத்தில் பலத்த மழை காரணமாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் போலி சுற்றறிக்கையைப் பரப்பிய 18 வயது இளைஞரை அம்மாநில சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 27-ம் தேதி, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று பெறப்பட்டது. அதில், "மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் ஏப்ரல் 27-ம் தேதி பொது விடுமுறை" என ஒரு போலி அரசாணை சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணையில் இறங்கினர். தொழில்நுட்ப உதவியுடன் துப்பு துலக்கிய போலீஸார், அந்தப் போலிச் செய்தியை உருவாக்கிய 18 வயது இளைஞரை அடுத்த 24 மணிநேரத்திற்குள் கண்டுபிடித்துக் கைது செய்தனர்.
பொதுமக்களைக் குழப்பும் வகையிலும், அரசு ஆவணங்களைப் போலியாகத் தயாரித்தும் சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.