அசாம் எல்லை பிரச்சினையால் கடும் தட்டுப்பாடு: மிசோரமில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடு

அசாமுடனான எல்லை மோதலால் மிசோரமில் பெட்ரோல், டீசல் வரத்து குறைந்துள்ளது. இதனால் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
அசாம் எல்லை பிரச்சினையால் கடும் தட்டுப்பாடு: மிசோரமில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடு
Published on

முக்கிய சாலை மூடல்

அசாம்-மிசோரம் எல்லையில் கடந்த மாதம் 26-ந்தேதி பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டதில் அசாமை சேர்ந்த 6 போலீசார் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் 50-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கே பதற்றம் நீடித்து வருவதால் இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக அசாம், மிசோரமை இணைக்கும் முக்கிய சாலையான என்.எச்.306 மூடப்பட்டு இருக்கிறது.

மிசோரமுக்கு உணவு பொருட்கள், எரிபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அசாம் வழியாக மேற்படி சாலை வழியேதான் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் 2 வாரங்களாக இந்த சாலை மூடப்பட்டு உள்ளதால் மிசோரமில் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

எனவே மாநிலத்தில் பெட்ரோல்-டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்து உள்ளது. அந்தவகையில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் திங்கள் முதல் சனி வரை காலை 6 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும். வாகனங்கள் ஒவ்வொன்றுக்கும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் விற்கக்கூடாது. உணவுப்பொருட்கள், எண்ணெய் மற்றும் சமையல் கியாஸ் போன்ற பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே போதுமான அளவுக்கு எரிபொருள் வழங்க வேண்டும்.

பிற வாகனங்களை பொறுத்தவரை, கனரக வாகனங்களுக்கு 50 லிட்டர், நடுத்தர ரக வாகனங்களுக்கு 20 லிட்டர் மட்டுமே அதிகபட்சமாக வழங்க வேண்டும். ஸ்கூட்டர்களுக்கு 3 லிட்டரும், பிற இரு சக்கர வாகங்களுக்கு 5 லிட்டரும், கார்களுக்கு 10 லிட்டரும் வழங்க வேண்டும் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் தங்கள் கையிருப்பு குறித்து ஒவ்வொரு நாளும் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். பீப்பாய்கள், கொள்கலன்களில் எரிபொருள் விற்பனை கூடாது எனவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அசாம் எல்லை மோதல் விவகாரம் மிசோரமில் கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com