மு.க.ஸ்டாலின் ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆக வேண்டும் - மணிசங்கர் அய்யர்

மு.க.ஸ்டாலினிடம் மக்களின் முக்கியமான பிரச்சினைகளை அடையாளம் காணும் திறன் உள்ளதாக மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆக வேண்டும் - மணிசங்கர் அய்யர்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர். முன்னாள் மத்திய மந்திரியான இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாமல் ஓரம்கட்டப்பட்டுள்ளார். கேரள சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ள நிலையில், அம்மாநிலத்தில் இடதுசாரிகள் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி என 3 மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த வாரம் திருவனந்தபுரத்தில் பேசிய மணிசங்கர் அய்யர், கேரள முதல்-மந்திரியாக சி.பி.ஐ.(எம்) கட்சியின் பினராயி விஜயன் தொடர்ந்து நீடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதே சமயம், மணிசங்கர் அய்யருக்கும், கட்சிக்கும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்பு இல்லை எனவும், அவர் பேசியது அவரது சொந்த கருத்து என்றும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆக வேண்டும் என மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “தற்போதைய சூழ்நிலையில், 2029-ம் ஆண்டை இலக்காகக் கொண்டு, ‘இந்தியா’ கூட்டணியை வழிநடத்த மு.க.ஸ்டாலினை விட பொருத்தமானவர்கள் வேறு யாரும் இல்லை.

வலுவான ‘இந்தியா’ கூட்டணி மட்டுமே 2029 பொதுத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய முடியும். அது இல்லாவிட்டால் ராகுல் காந்தியால் பிரதமராக முடியாது. மு.க.ஸ்டாலினால் மட்டுமே தேசிய அளவில் கூட்டணியை வலிமையாக வழிநடத்த முடியும். அதே நேரம் அவரது மகன் உதயநிதி மற்றும் மற்ற அமைச்சர்கள், வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மாநில அரசாங்கத்தை நடத்த முடியும்.

‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சந்தேகத்திற்கு இடமின்றி ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக இருந்தாலும், கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குவது குறித்து காங்கிரஸ் கவலை கொள்ளக் கூடாது. பல ஆண்டுகளாக காங்கிரசின் மிகவும் நம்பகமான கூட்டணியாக தி.மு.க. இருந்துள்ளது. மேலும் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் மு.க.ஸ்டாலின் ஒரு சிறந்த நிர்வாகியாக தன்னை நிரூபித்திருக்கிறார்.

மக்களின் முக்கியமான பிரச்சினைகளை அடையாளம் காணும் மு.க.ஸ்டாலினின் திறன், அவரை ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தகுதிவாய்ந்தவராக ஆக்குகிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com