பரபரப்பாகும் மராட்டிய அரசியல்.. முதல்-மந்திரி பட்னாவிசுடன் ராஜ்தாக்கரே திடீர் சந்திப்பு


பரபரப்பாகும் மராட்டிய அரசியல்.. முதல்-மந்திரி பட்னாவிசுடன் ராஜ்தாக்கரே திடீர் சந்திப்பு
x

உத்தவ் தாக்கரேவுடன் கூட்டணி பேசி வரும் நிலையில், ராஜ்தாக்கரே தேவேந்திர பட்னாவிசை நேற்று சந்தித்தார்.

மும்பை,

மராட்டியத்தில் தாக்கரே சகோதரர்கள் என அறியப்படும் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ்தாக்கரே 20 ஆண்டுகாலம் அரசியலில் எதிரும், புதிருமாக செயல்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும், நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேயும் சமீபத்தில் நடந்த இந்தி திணிப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் ஒன்றாக கலந்துகொண்டு அரசியல் அதிர்வலையை ஏற்படுத்தினர். மேலும் அவர்கள் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மும்பை, தானே உள்ளிட்ட மாநகராட்சி தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நடந்த பெஸ்ட் கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்ட உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே ஆதரவு அணியினர் படுதோல்வி அடைந்தனர். மொத்தம் உள்ள 21 இடங்களில் அவர்களால் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்த முடிவு உத்தவ், ராஜ்தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இந்தநிலையில் நேற்று காலை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மும்பை வர்ஷா இல்லத்தில், ராஜ்தாக்கரே திடீரென அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடந்தது. உத்தவ் தாக்கரே கட்சியுடன், நவநிர்மாண் சேனா மாநகராட்சி தேர்தல் கூட்டணி தொடா்பாக பேசிவரும் நிலையில், ராஜ்தாக்கரே பா.ஜனதா மூத்த தலைவரும், முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சந்திப்புக்கு பிறகு ராஜ்தாக்கரே பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசியதாக கூறினார்.

1 More update

Next Story