செல்போன் பறித்துக்கொண்டு ஸ்கூட்டரில் தப்பிய வாலிபர்.. பொதுமக்கள் பிடிக்க முயன்ற போது நடந்த அதிர்ச்சி

ஸ்கூட்டரில் வந்த 2 வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில், ஊழியர் ஒருவர் கையில் வைத்திருந்த செல்போனை பறித்தனர்.
செல்போன் பறித்துக்கொண்டு ஸ்கூட்டரில் தப்பிய வாலிபர்.. பொதுமக்கள் பிடிக்க முயன்ற போது நடந்த அதிர்ச்சி
Published on

பெங்களூரு,

பெங்களூரு அல்சூர்கேட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கப்பன்பேட்டை 14-வது கிராசில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் செல்போன் பேசியபடி நடந்து சென்றார். அப்போது ஸ்கூட்டரில் வந்த 2 வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில், அந்த ஊழியர் கையில் வைத்திருந்த செல்போனை பறித்தனர். பின்னர் அதே ஸ்கூட்டரில் அங்கிருந்து தப்பித்து செல்ல வேகமாக சென்றனர்.

செல்போனை பறிகொடுத்த ஊழியர், திருடன்... திருடன்... எனக்கூறியபடி வாலிபர்கள் சென்ற ஸ்கூட்டரை விரட்டியபடி ஓடி வந்தார். அந்த சந்தர்ப்பத்தில் சாக்கு மூட்டையில் சரக்குகளை தூக்கி கொண்டு நடந்து வந்த தொழிலாளி, வாலிபர்கள் தப்பி சென்ற ஸ்கூட்டரின் முன் டயர் மீது மூட்டை தூக்கி வீசினார்.

இதில் ஸ்கூட்டர் கவிழ்ந்து விழுந்தது. உடனே செல்போனை வீசிவிட்டும், ஸ்கூட்டரை எடுக்காமலும் 2 வாலிபர்களும் ஓடினார்கள். அங்கிருந்த பொதுமக்கள் வாலிபர்களை பிடிக்க முயன்றனர். அப்போது திடீரென்று ஒரு வாலிபர் அங்குள்ள நடைபாதையில் சுருண்டு விழுந்தார். இதை பார்த்து தப்பி ஓடிய அவரது கூட்டாளி நண்பரை தூக்கிவிட ஓடிவந்தார். அவரை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

அதே நேரத்தில் சுருண்டு விழுந்து உயிருக்கு போராடிய வாலிபர் அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு வாலிபரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அந்த வாலிபருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

அத்துடன் பொதுமக்களிடம் சிக்கிய வாலிபரும் கைது செய்யப்பட்டார். விசாரணையில், மாரடைப்பால் உயிரிழந்தவர் பெயர் ஜூனைத் என்றும், கைதான கூட்டாளி அர்பாஜ் என்றும் தெரிந்தது. மேலும் ஏற்கனவே ஜூனைத் இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com