மோடி அரசு, உணவு பாதுகாப்பு சட்டத்தை கொடூரமான முறையில் புறக்கணிக்கிறது -ப.சிதம்பரம்

மோடி அரசு எம்ஜிஎன்ஆர்இஜிஏ மற்றும் உணவு பாதுகாப்பு சட்டத்தை கொடூரமான முறையில் புறக்கணிக்கிறது என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
மோடி அரசு, உணவு பாதுகாப்பு சட்டத்தை கொடூரமான முறையில் புறக்கணிக்கிறது -ப.சிதம்பரம்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் 3 சிறுமிகள் பட்டினியால் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய அரசும், டெல்லி கெஜ்ரிவால் அரசும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதுதொடர்பாக பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது. 3 சிறுமிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறுகையில், சிறுமிகளின் வயிற்றில் உணவோ, தண்ணீரோ எதுவும் இல்லை. அவர்கள் சாப்பிட்டு 8 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. பட்டினிச்சாவு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உத்தரவிட்டார்.

டெல்லி சிறுமிகளின் பட்டினிச்சாவு போன்ற சம்பவங்களை தடுக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்ட, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) மற்றும் உணவு பாதுகாப்பு சட்டத்தை மோடி அரசு கொடூரமான முறையில் புறக்கணிக்கிறது என மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஏழைகளுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க அவர்களுடைய வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் வகையில் கொண்டுவரப்பட்டது. ஏழைகளுக்கு மானிய உணவு தானியங்கள் வழங்குவதற்காக உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எம்ஜிஎன்ஆர்இஜிஏ பசியை முடிவுக்கு கொண்டுவர கொண்டுவரப்பட்டது. உணவு பாதுகாப்பு சட்டம் பட்டினியை முடிவுக்கு கொண்டுவர கொண்டுவரப்பட்டது. ஆனால் இரண்டு சட்டங்களும் பா.ஜனதா அரசால் கொடூரமான முறையில் புறக்கணிக்கப்படுகிறது, என குறிப்பிட்டுள்ளார்.

மூன்று சிறுமிகள் பசியால் உயிரிழந்த சம்பவத்தால் அவமானத்திலும், துயரத்திலும் நாம் தலைகுனிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com