

புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சி செய்து வரும் பா.ஜனதா, கடந்த 12 ஆண்டுகளில் ஏராளமான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இதில் பல மசோதாக்கள் பெரும் தடைகளை எதிர்கொண்ட போதும், அவற்றை நிறைவேற்றி வெற்றி கண்டது. மோடி அரசு. அந்தவகையில் முதல் ஆட்சிக்காலத்தில் நில ஆர்ஜித மசோதா, 2-வது ஆட்சிக்காலத்தில் 3 வேளாண் மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில்தான் நிறைவேற்றப்பட்டன.
மேலும் மோடி அரசின் முக்கியமான முத்தலாக் தடை சட்டம், குடியுரிமை திருத்தச்சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து சட்டம், வக்பு திருத்தச்சட்டம் போன்றவையும் பெரும் எதிர்ப்பை பெற்றிருந்தன.
எனினும் இவை அனைத்தும் நாடாளுமன்ற ஒப்புதலை பெற்று இன்று அமலில் இருக்கின்றன.
ஆனால் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரை யறை செய்து, மகளிர் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியலமைப்பு சட்டத்தின் 131-வது திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது.
கடந்த 12 ஆண்டு கால மோடி ஆட்சியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மசோதா தோல்வி அடைவது இதுவே முதல் முறையாகும். இது ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.