ஜிஎஸ்டி விவகாரத்தில் ‘மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்’; காங்கிரஸ்


ஜிஎஸ்டி விவகாரத்தில்  ‘மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்’; காங்கிரஸ்
x

ஜி.எஸ்.டி அமலான 2017 ஜூலை மாதம் முதலே ஜி.எஸ்.டி. 2.0-க்கு நாங்கள் கோரிக்கை விடுத்து வந்தோம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் இன்று (திங்கட்கிழமை) அமலுக்கு வருவதையொட்டி பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது இந்த சீர்திருத்தத்தை ஜி.எஸ்.டி. சேமிப்பு திருவிழா என பிரதமர் வர்ணித்தார். இதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘நரேந்திர மோடிஜி, காங்கிரசின் எளிமையான மற்றும் திறமையான ஜி.எஸ்.டி.க்கு பதிலாக உங்கள் அரசு கப்பார் சிங் வரியை 9 வெவ்வேறு அடுக்குகளில் விதித்தது. கடந்த 8 ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடிக்கு அதிகமாக வசூலித்தது. தற்போது ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு திருவிழா குறித்து பேசுகிறீர்கள். மக்களுக்கு ஆழமான காயங்களை ஏற்படுத்திய பிறகு ஒரு எளிய கட்டு போடுகிறீர்கள்’ என சாடியுள்ளார்.

மேலும் அவர், ‘மக்கள் தங்களின் பருப்பு, அரிசி, தானியங்கள், பென்சில், புத்தகம், மருத்துவ சிகிச்சைகள் மற்றும் விவசாயிகளின் டிராக்டர்கள் என ஒவ்வொன்றுக்கும் நீங்கள் ஜி.எஸ்.டி. வசூலித்ததை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இதற்காக உங்கள் அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.இதைப்போல அரசியல்சான அமைப்பான ஜி.எஸ்.டி. கவுன்சில் செய்த ஜி.எஸ்.டி. திருத்தத்துக்கான உரிமையை தானே எடுத்துக்கொள்வதற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றியதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘ஜி.எஸ்.டி அமலான 2017 ஜூலை மாதம் முதலே ஜி.எஸ்.டி. 2.0-க்கு நாங்கள் கோரிக்கை விடுத்து வந்தோம். எங்கள் 2024 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் கூட அதை முக்கிய வாக்குறுதியாக அளித்து இருந்தோம். தற்போதைய ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் போதுமானதல்ல. பொருளாதாரத்தில் முக்கிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறைகளின் பரவலான கவலைகள் உள்பட ஏராளமான பிரச்சினைகள் உள்ளன’ என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் இந்தியா-அமெரிக்கா உறவுச்சிக்கல், லட்சக்கணக்கான எச்1-பி விசாதாரர்களின் கவலைகள், அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக 42-வது முறையாக டிரம்ப் கூறியிருப்பது குறித்தும் பிரதமர் மோடி உரையாற்றுவாரா? என்றும் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.

1 More update

Next Story