மேற்காசிய போர் சூழல் குறித்து ஓமன் மன்னர், பிரான்ஸ், மலேசியா பிரதமர்களுடன் மோடி உரையாடல்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் மோதலை தணிக்க இந்தியா ஆதரவளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்காசிய போர் சூழல் குறித்து ஓமன் மன்னர், பிரான்ஸ், மலேசியா பிரதமர்களுடன் மோடி உரையாடல்
Published on

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக் மற்றும் மலேசியா அதிபர் அன்வர் இப்ராஹிம் ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசியில் உரையாடினார். அப்போது அவர்களிடம் மேற்காசிய போர் சூழல் குறித்து பிரதமர் மோடி விவாதித்தார்.

மேலும், அந்த பிராந்தியத்தில் நிலவும் மோதலை தணிப்பதற்கும், தொடர்ந்து அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் இந்தியா ஆதரவளிப்பதாக மோடி தெரிவித்தார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவுகளில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது;-

“எனது அன்பு நண்பர், அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் மேற்கு ஆசியாவின் நிலைமை, பதற்றத்தை தணிப்பதன் அவசரத் தேவை, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து இன்று உரையாடினேன். அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்துவதற்காக எங்கள் நெருங்கிய ஒருங்கிணைப்பைத் தொடர்வதில் ஆவலுடன் உள்ளோம்.

எனது சகோதரர் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குடன் பயனுள்ள உரையாடலை நடத்தினேன். பதற்றத்தை தணிப்பதற்கும், அதனைத் தொடர்ந்து அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.

ஓமனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியாவின் கண்டனத்தை பதிவு செய்தேன். இந்திய குடிமக்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு வழிவகை செய்த ஓமன் அரசின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தேன்.

இந்தியாவும், ஓமனும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்துகின்றன.

மலேசியாவின் பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் நடத்திய உரையாடலில், மேற்காசியாவின் கவலைக்குரிய சூழல் குறித்தும், பேச்சுவார்த்தை மூலம் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டு கொண்டு வருவதில் எங்களுக்கு இருக்கும் உறுதிப்பாடு குறித்தும் விவாதித்தோம்.”

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com