

குஷிநகர்,
புத்தர் பெருமான், உத்தரபிரதேச மாநிலத்தில் கோரக்பூரில் இருந்து 53 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ள குஷிநகரில்தான் தனது 80-வது வயதில் முக்தி அடைந்தார். இதன் நினைவாக அங்கு மகாபரிநிர்வாண கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த தலம், புத்த மதத்தினரின் புனிதத்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.
இந்த தலத்தை பிற புத்த வழிபாட்டு தலங்களுடன் இணைக்கிற விதத்தில், ரூ.260 கோடியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த விழாவில் மாநில கவர்னர் ஆனந்தி பென் படேல், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, பல்வேறு நாடுகளின் தூதர்கள் உள்பட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
புத்தருக்கு மரியாதை
இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
உலகமெங்கும் உள்ள புத்த மதத்தினருக்கு மரியாதை, நம்பிக்கை, உத்வேகத்தின் மையமாக இந்தியா உள்ளது. இன்று குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்திருப்பது, ஒரு வகையில் புத்தருக்கு மரியாதை செலுத்துவதாகும்.
புத்தர் ஞானம் பெற்றதில் இருந்து மகாபரிநிர்வாணம் அடைந்தது வரையிலான முழுப்பயணத்தையும் நேரில் கண்ட இந்த பகுதி, இன்று நேரடியாக உலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இங்கு இலங்கையின் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்து முதன்முதலாக தரை இறங்கி உள்ளது.
குஷிநகர் சர்வதேச விமான நிலையம், பல தசாப்த கால நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பின் விளைவு ஆகும். இந்த விமான நிலையம் தொடர்புகளை, சுற்றுலா துறையை மேம்படுத்தும். புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
வேலைவாய்ப்பு
புத்தர் பெருமானுடன் தொடர்புடைய இடங்களை மேம்படுத்துவதற்காக, சிறந்த தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக, பக்தர்களுக்கு வசதிகளை உருவாக்க இந்தியா இன்று சிறப்பு கவனம் செலுத்துகிறது. உத்தரபிரதேச மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவற்றின் முன்னுரிமைகளில் ஒன்று, குஷிநகரின் வளர்ச்சி.
குஷிநகரின் சர்வதேச விமான நிலையம், விமான தொடர்புக்கான ஒரு மையமாக மட்டுமில்லாமல், அதன் கட்டுமானத்தின் காரணமாக விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், கடைக்காரர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர் என அனைவரும் நேரடிப்பயன் அடைவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
புத்தர் திருப்பண்டங்களுடன் இலங்கை விமானம்
குஷிநகர் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவையொட்டி, முதல் விமானம் இலங்கையில் இருந்து வந்து தரையிறங்கியது.
இந்த விமானத்தில் இலங்கையின் வாஸ்கதுவா சுப்புத்தி ராஜ்விகாரா கோவிலில் இருந்து புத்தர் பெருமானின் திருப்பண்டங்களை (உடல் பாகங்கள்) அந்தக் கோவில் மகாநாயகா தலைமையிலான 12 உறுப்பினர்கள் புனித திருப்பண்ட குழுவினர் கொண்டு வந்தனர். புத்தர் பெருமானின் இந்த திருப்பண்டங்கள் 19-ம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டு, இலங்கை கொண்டு செல்லப்பட்டு வாஸ்கதுவா சுப்புத்தி ராஜ்விகாரா கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. இப்போது இங்கே காட்சிக்கு வைக்கப்படும்.
இந்த விமானத்தில், இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சேயின் மகனும், அந்த நாட்டின் விளையாட்டு துறை மந்திரியுமான நமல் ராஜபக்சே தலைமையில் 5 மந்திரிகளும் வந்தனர். அனைவரையும் பிரதமர் மோடி வரவேற்றார்.
குஷிநகர் புதிய சர்வதேச விமான நிலையம், இந்திய, இலங்கை உறவில் புதிய மைல் கல் என நமல் ராஜபக்சே டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். இந்த விழாவின் போது அவர் பிரதமர் மோடியிடம் பக்வத் கீதை தமிழ், ஆங்கில, சிங்கள பதிப்பை நேரில் வழங்கினார்.
புத்த கோவில் விழா
குஷிநகரில் உள்ள புத்தர் பெருமானின் மகாபரிநிர்வாண கோவிலுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு மகாபரிநிர்வாண கோலத்தில் (சாய்ந்தகோலம்) காணப்படுகிற புத்தர் பெருமானை வழிபட்டார்.
அபிதம்ம தின விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டுபேசினார். அப்போது அவர், இந்த புனித பூமியில் புத்தர் பெருமான் அவரது திருப்பண்டங்கள் (உடல் பாகங்கள்) வடிவில் காணப்படுவது சிறப்பு. இந்த நாளில் பல இயற்கைக்கு அப்பாற்பட்ட சங்கமங்கள், இயற்கைக்கு அப்பாற்பட்ட தற்செயல்கள் ஒன்றாக வெளிப்படுகின்றன என பெருமிதத்துடன் கூறினார்.
அரசியல்சானத்துக்கு புத்தர் உத்வேகம்
புத்தர் உலகளாவியவர். இந்திய அரசியல் சாசனத்துக்கு புத்தர்தான் இன்றைக்கும் உத்வேகம் தருகிறார். நமது மூவர்ணக்கொடியில் உள்ள தம்மசக்கரம்தான் நாட்டின் உந்து சக்தி எனவும் குறிப்பிட்டார்.
இந்த விழாவில் மியான்மர், வியட்னாம், கம்போடியா, தாய்லாந்து, பூடான், தென்கொரியா, இலங்கை, மங்கோலியா, ஜப்பான் நாடுகளின் தூதர்கள், சிங்கப்பூர், நேபாளம் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த விழாக்களுடன், ராஜ்கியா மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். பல்வேறு புதிய பணிகளுக்கு அவர் அடிக்கல்லும் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.