பிரதமர் பதவியை தனது குடும்ப சொத்து என்று ராகுல்காந்தி நினைக்கிறார்: மோடி கடும் தாக்கு

பிரதமர் பதவியை தனது குடும்ப சொத்து என்று ராகுல்காந்தி நினைக்கிறார் என மோடி கடுமையாக தாக்கினார்.
பிரதமர் பதவியை தனது குடும்ப சொத்து என்று ராகுல்காந்தி நினைக்கிறார்: மோடி கடும் தாக்கு
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி கர்நாடகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால், பிரதமர் பதவியை ஏற்க தயார் என்று ராகுல்காந்தி நேற்று முன்தினம் பெங்களூருவில் அறிவித்தார்.

இதற்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். நேற்று கோலார் மாவட்டம் பங்காருப்பேட்டையில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு இதுபற்றி பேசியதாவது:-

கர்நாடகத்தில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இந்திய அரசியல் நிலை குறித்து சில விஷயங்கள் நடந்தது. பிரதமர் பதவியில் அமர சில தலைவர்கள் 40 ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். திடீரென்று ஒருவர் (ராகுல் காந்தி) வந்து வரிசையில் வாளியை வைத்துவிட்டு, நான் அடுத்த பிரதமர் ஆவேன் என்று அவரே தன்னிச்சையாக அறிவித்து உள்ளார்.

அவர், மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்களை பற்றி கவலைப்படவில்லை. அவரது இந்த அறிவிப்பு எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பக்குவம் இல்லாத அவரை நாட்டு மக்கள் பிரதமராக ஏற்றுக்கொள்வார்களா?...பிரதமர் பதவி என்பது தங்களது குடும்பத்துக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட சொத்து என்றும் அது தங்களது பரம்பரை உரிமை எனவும் இவர்கள் (ராகுல்காந்தி) நினைக்கிறார்கள்.

நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரசுக்கு 44 எம்.பி.க்கள்தான் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக அவர்கள் பல்வேறு மாநில தேர்தல்களில் தோற்று இருக்கிறார்கள். ஆனாலும் 2019-ல் வெற்றி பெற்று பிரதமர் ஆவேன் என்று அவர் (ராகுல்காந்தி) கூறுகிறார். இது அக்கட்சியின் உச்சகட்ட கர்வத்தை காட்டுகிறது. அந்த கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லையா?. அதுபற்றி அவர் கவலைப்படவில்லை.

1977-ம் ஆண்டு வட மாநிலங்கள் முழுவதிலும் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்ட பிறகு சிக்மகளூரு இடைத் தேர்தலில்

போட்டியிடுவதற்காக 1978-ல் இங்கே இந்திரா காந்தி வந்தார். அரசியலில் மறுவாழ்வும் பெற்றார். ஆனால் தனக்கு வாக்களித்த மக்களை சந்திப்பதற்காக அவர் மீண்டும் சிக்மகளூரு வந்தாரா?...

1999-ம் ஆண்டு பெல்லாரி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு பெல்லாரி மக்களுக்காக அவர் ஏதாவது செய்தாரா?... எதையும் செய்யவில்லை.

இவ்வாறு மோடி பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com