மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும் - மத்திய மந்திரி பஸ்வான் நம்பிக்கை

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய மந்திரி பஸ்வான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும் - மத்திய மந்திரி பஸ்வான் நம்பிக்கை
Published on

ராஞ்சி,

மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான், ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில், எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்ட ஒற்றுமை குறுகிய காலமே நீடிக்கக் கூடியது. இடைத்தேர்தல்களில், ஓரிரு தொகுதிகளில் அவர்கள் விட்டுக்கொடுக்கக்கூடியது இயல்புதான். ஆனால், பொதுத்தேர்தல்களில் ஒரு மாநிலம் முழுவதுமோ, நாடு முழுவதுமோ ஒவ்வொரு கட்சியின் அந்தஸ்துக்கு ஏற்ப தொகுதிகளை பகிர்ந்து கொள்வது கடினம். எனவே, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் விரும்பினால், தொகுதி பங்கீட்டில் சிக்கல் வரும்.

உதாரணமாக, உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 40 மக்களவை தொகுதிகளை சமாஜ்வாடி விட்டுத்தருமா? மேலும், காங்கிரஸ், அஜித்சிங் கட்சிகளுக்கு என்ன கிடைக்கும்? கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ரேபரேலி, அமேதி ஆகிய 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

அத்தகைய பாரம்பரிய தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க அந்த கட்சி முன்வருமா? அப்படி விட்டுக்கொடுத்தால், தொண்டர்களின் மனநிலை என்னவாக இருக்கும்?

எதிர்க்கட்சிகள் கூட்டணி உருவானால், யார் தலைவர்? காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எந்த கூட்டணி கட்சியாவது ஏற்றுக் கொண்டுள்ளதா? அவரை ஏற்றுக்கொள்ளாதபட்சத்தில், அகிலேஷ் யாதவையோ, மாயாவதியையோ, மம்தா பானர்ஜியையோ கூட்டணி தலைமையாக காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளுமா? கூட்டணி அமைக்கும் முன்பு, இந்த பெரிய கேள்விகளுக்கு விடை காண வேண்டி இருக்கும்.

ஜனநாயகம் வலிமையாக இருக்க வேண்டுமானால், எதிர்க்கட்சிகள் வலிமையாக இருக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ளன. அவர்களிடையே தலைமை பிரச்சினை உள்ளது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைமை பிரச்சினையே இல்லை. பிரதமர் மோடியின் வலிமையான தலைமையின் கீழ் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம். அதில், அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம். இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com