‘தொழில் அதிபர்களுக்கு மட்டுமே மோடியின் மனதில் இடம் உள்ளது’ - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியின் மனதில் தொழில் அதிபர்களுக்கு மட்டுமே இடம் உள்ளது என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
‘தொழில் அதிபர்களுக்கு மட்டுமே மோடியின் மனதில் இடம் உள்ளது’ - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Published on

தாடியா,

மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 28-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசியதாவது:-

ரபேல் ஒப்பந்தம் வழங்குவதில் அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை (எச்.ஏ.எல்.) தவிர்த்து விட்டு தனியாருக்கு சொந்தமாக அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டதன் மூலம் மோடி அரசு இந்த நாட்டுக்கு மிகப்பெரிய அநீதி இழைத்துள்ளது.

ரூ.45 ஆயிரம் கோடி வங்கி கடனை கட்டாத அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ரபேல் ஒப்பந்தத்தை வழங்கியது ஏன்? என என்னுடைய கேள்விக்கு இதுவரை பிரதமர் நரேந்திர மோடி தைரியமாக பதில் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறார். நாடாளுமன்றத்தில் என்னுடைய கேள்விகளுக்கு என் கண்ணை பார்த்து நேரடியாக அவர் பேச தயங்குகிறார்.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என செல்லும் இடங்கள் எல்லாம் மோடி முழங்கி வருகிறார். ஆனால் உத்தரபிரதேசத்தில் அவருடைய கட்சி எம்.எல்.ஏ. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ளார். முதலில், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என மோடி முழக்கமிட வேண்டும்.

மோடி தன்னுடைய பேச்சில் வங்கி மோசடியில் தொடர்புடைய மெகுல் சோக்சி, நிரவ் மோடி மற்றும் வங்கி கடனை கட்டாத அனில் அம்பானி ஆகியோரை சகோதரர் (பாய்) என அன்புடன் அழைக்கிறார். தொழில் அதிபர்களிடம் மட்டுமே மோடி நெருக்கம் காட்டுகிறார். ஆனால் ஒருபோதும் விவசாயியையோ, தொழிலாளி போன்ற ஏழை மக்களையோ அவர் அவ்வாறு அழைப்பதில்லை. ஏனெனில் அவர்கள் கோட்-சூட் போன்றவற்றை அணிவதில்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் நாட்டு மக்களின் காவலன் என மோடி தன்னை குறிப்பிட்டார். ஆனால் அவருடைய ஆட்சியில் விவசாயிகள் முன்னேறவில்லை. 15 முதல் 20 பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டுமே பயனடைந்து இருக்கின்றன. உண்மையில் மோடி மனதில் ஏழைகளுக்கு இடம் இல்லை. தொழில் அதிபர்களுக்கு மட்டுமே இடம் உள்ளது.

சுதந்திர தின உரையில் நாடு சுதந்திரம் அடைந்து காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் அடையவில்லை என மோடி குற்றம்சாட்டினார். இதன் மூலம் அவர் காங்கிரஸ் கட்சியை மட்டும் அவமதிக்கவில்லை. இந்த நாட்டுக்காக உழைத்த தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், வியாபாரிகள், நம் மூத்தோர் என அனைவரையும் மோடி அவமதித்து உள்ளார்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடனேயே விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com