மோகாமா இடைத்தேர்தல்; எனது வெற்றி முன்பே நிச்சயிக்கப்பட்டு விட்டது: நீலம் தேவி பேட்டி

எனது வெற்றி முன்பே நிச்சயிக்கப்பட்டு விட்டது என்றும் தேர்தல் வெறும் ஒரு சட்ட விதிமுறைக்காகவே நடக்கிறது என்றும் நீலம் தேவி கூறியுள்ளார்.
மோகாமா இடைத்தேர்தல்; எனது வெற்றி முன்பே நிச்சயிக்கப்பட்டு விட்டது: நீலம் தேவி பேட்டி
Published on

புதுடெல்லி,

நாட்டில் காலியாக இருந்த அந்தேரி கிழக்கு (மராட்டியம்), மோகாமா, கோபால்கஞ்ச் (பீகார்), ஆதம்பூர் (அரியானா), தாம்நகர் (ஒடிசா), கோலகோகர்நாத் (உத்தர பிரதேசம்) மற்றும் முனோகோடே (தெலுங்கானா) ஆகிய 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ந்தேதி நடந்தது.

இந்த தேர்தலில் முனோகோடே தொகுதியில அதிகபட்சம் 77 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. அந்தேரி கிழக்கில்தான் மிகக்குறைவாக 35 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகள் பதிவாகின.

இந்த 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன. இதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, பீகாரின் மோகாமா தொகுதியில் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் வேட்பாளர் நீலம் தேவி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

அவர் 6-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் 22,756 ஓட்டுகள் பெற்று உள்ளார். பா.ஜ.க.வை சேர்ந்த வேட்பாளர் சோனம் தேவி 15,032 ஓட்டுகளுடன் அவரை பின்தொடருகிறார்.

இதுபற்றி நீலம் தேவி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, எனது வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது. எனக்கு போட்டியாக யாரும் இல்லை என நான் முன்பே கூறி விட்டேன். தேர்தல் வெறும் ஒரு சட்ட விதிமுறைக்காகத்தான் நடக்கிறது. மோகாமா தொகுதி பரசுராமின் நிலம்.

இந்த மக்களை ஏமாற்ற முடியாது. ஆனந்த் சிங் மக்களுக்கு சேவையாற்றி உள்ளார். அதற்கான முடிவை மக்கள் தற்போது தந்துள்ளனர் என கூறியுள்ளார்.

எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் ஆயுத சட்ட வழக்கில் குற்றவாளி என சட்டசபை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ராஷ்டீரிய ஜனதா தள கட்சி அந்த தொகுதிக்கான போட்டியில் அவரது மனைவியான நீலம் தேவியை தேர்தலில் நிறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com