

புதுடெல்லி,
இந்தி திரைப்பட நடிகர் நசிருதீன் ஷா சமீபத்தில், நாட்டில் போலீசாரின் உயிர் பலியை விட பசுக்களுக்கு சிலர் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர் என பேசினார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் லாஹூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்பொழுது, சிறுபான்மையினரை எப்படி நடத்த வேண்டும் என நாங்கள் மோடி அரசுக்கு காண்பிப்போம். இந்தியாவில், சிறுபான்மையினர் மற்ற குடிமக்களுக்கு இணையாக நடத்தப்படுவதில்லை என மக்கள் கூறி வருகின்றனர் என பேசினார்.
இவரது பேச்சுக்கு இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அனைத்து இந்திய மஜ்லிஸ் இ இத்திஹதுல் முஸ்லிமீன் அமைப்பு தலைவர் அசாதுதீன் ஓவைசி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில்,
பாகிஸ்தான் அரசியலமைப்பின்படி, அந்நாட்டில் ஜனாதிபதியாக ஒரு முஸ்லிம் நபரே வரமுடியும்.
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த பல்வேறு ஜனாதிபதிகள் உள்ளனர். உள்ளடக்கிய அரசியல் மற்றும் சிறுபான்மையோருக்கான உரிமை ஆகியவை பற்றி எங்களிடம் இருந்து கான் சஹாப் கற்று கொள்ளும் நேரமிது என வெளியிட்டார்.
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது கைப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாகிஸ்தான் பிரிவினையின்பொழுது அங்கு 20 சதவீத சிறுபான்மையினர் இருந்தனர். ஆனால் இன்று 2 சதவீதத்திற்கு குறைவாக அவர்கள் உள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து சிறுபான்மையின மக்கள் தொகை வளர்ச்சியடைந்து வருகிறது என தெரிவித்து உள்ளார்.
சிறுபான்மையினரை எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றி அறிவுரை வழங்கும் கடைசி நாடாக பாகிஸ்தான் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.