ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் எல்லையில் நிற்க வேண்டும்: ஓவைசி காட்டம்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் எல்லையில் நிற்க வேண்டும் என்று அசாதுதின் ஓவைசி கடுமையாக விமர்சித்துள்ளார். #MohanBhagwat
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் எல்லையில் நிற்க வேண்டும்: ஓவைசி காட்டம்
Published on

புதுடெல்லி,

பீகாரில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கூட்டத்தில் அதன் தலைவர் மோகன் பகவத் பேசும்போது, ஆர்.எஸ்.எஸ். ராணுவ வீரர்களை தயார்படுத்த வெறும் 3 நாட்கள் போதும். ராணுவத்துக்கு இது 6 அல்லது 7 மாதங்கள் வரை ஆகும். இதுதான் எமது திறமை. நாட்டுக்கு அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அரசியல் சாசனம் அனுமதித்தால் அதை நாங்கள் செய்வோம் என்று குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இந்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். இதையடுத்து, விளக்கம் அளித்த ஆர்.எஸ்.எஸ், மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுடன் ராணுவத்தை ஒப்பிடவில்லை என்றும், அவரது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், மோகன் பகவத் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ள அசாதுதின் ஓவைசி, மோகன் பகவத் எல்லையில் போய் நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓவைசி கூறியதாவது:- இரவு 9 மணிக்கு தொலைகாட்சிகளில் விவாதங்களில் பங்கேற்பவர்கள் இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்றைப் பற்றி விவாதிக்கிறார்கள். ஆனால், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவத்தில் இருக்கும் முஸ்லிம் வீரர்கள் 5 பேர் சஞ்சுவான் முகாமில் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு நாட்டுக்காக உயிரை தியாகம் செய்துள்ளனர். அது குறித்து யாரும் பேசுவதில்லை.

உரி, பதான்கோட், நக்ரோட்டா பகுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருந்து நாம் இன்னமும் பாடம் கற்கவில்லை. நாட்டின் புலனாய்வுத் துறை சஞ்சுவான் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்த இருக்கும் தாக்குதலை முன்கூட்டியே கண்டுபிடிப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. ராணுவத்தைக் காட்டிலும் போருக்கு வேகமாகத் தயாராவோம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளது ராணுவத்தினரின் உணர்வுகளை புதைக்கும் செயலாகும்.

ஒரு கலாச்சார அமைப்பு தனது ஆதரவாளர்களுக்கு ராணுவம் போல் எப்படி பயிற்சி அளிக்க முடியும்?. அப்படி என்றால், ராணுவத்தைக் காட்டிலும் ஆர்எஸ்எஸ் படை வலிமையானவர்கள், திறமையானவர்கள் என்று மோகன் பகவத் கூறுகிறாரா?. அவரின் வார்த்தைகளை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். ராணுவம் குறித்து பேசும் முன், ஆர்எஸ்எஸ் ஆதராவாளர்களுக்கு தலைமை ஏற்று எல்லையில் சென்று மோகன் பகவத் நிற்க வேண்டும் இவ்வாறு ஓவைசி பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com