பணமதிப்பு நீக்க நடவடிக்கை திட்டமிட்ட கொள்ளை மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஒரு திட்டமிட்ட கொள்ளை, அதன் எந்த நோக்கமும் எட்டப்படவில்லை என்று மன்மோகன் சிங் கூறினார்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை திட்டமிட்ட கொள்ளை மன்மோகன் சிங் குற்றச்சாட்டு
Published on

ஆமதாபாத்,

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நேற்று குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு சென்றார். அங்கு சட்டசபை தேர்தலையொட்டி, தொழில் அதிபர்கள் மற்றும் வணிகர்களுடனான உரையாடல் நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதில் அவர் பேசியதாவது:-

பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஒரு திட்டமிட்ட கொள்ளை, சட்டரீதியான கொள்ளை. எவ்வித முன்யோசனையும் இல்லாத நடவடிக்கை. அது அமல்படுத்தப்பட்டதற்கான எந்த நோக்கமும் எட்டப்படவில்லை.

வரி பயங்கரவாதம்

பணமதிப்பு நீக்க நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. வரி அமலாக்கமும் வணிகர்களிடையே வரி பயங்கரவாத அச்சத்தை உருவாக்கி உள்ளது. அதனால், முதலீடு செய்வதற்கு பயப்படுகின்றனர். தனியார் முதலீட்டின் வளர்ச்சி, கடந்த 25 ஆண்டுகளில் இந்த அளவுக்கு குறைந்தது இல்லை. இது, பொருளாதாரத்துக்கு மிகவும் ஆபத்தானது.

குறிப்பாக சிறு வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி. வரி, கெட்ட கனவாகவே ஆகிவிட்டது.

ஆமதாபாத்-மும்பை இடையிலான புல்லட் ரெயில் திட்டம் பயனற்றது. மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்தத்தால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலை பறிபோனது

குஜராத் மாநிலம் சூரத்தில் மட்டும் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து 60 ஆயிரம் விசைத்தறிகள் செயல்படவில்லை. ஒவ்வொரு 100 விசைத்தறிக்கும் 35 வேலைவாய்ப்பு பறிபோகிறது. அந்த அடிப்படையில், சூரத் நகரில் இந்த ஒரு துறையில் மட்டும் 21 ஆயிரம் வேலைவாய்ப்புகள் பறிபோய் விட்டன.

நாட்டின் மற்ற பகுதிகளிலும் இதே நிலைமைதான்.

சமீபத்தில், குஜராத் மாநிலத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். குஜராத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் போராட்டம் பா.ஜனதா அரசுகள் மீது எந்த அளவுக்கு அதிருப்தி வேரூன்றி இருக்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு ஆகும்.

குஜராத்தில் காற்று மாறி வீசி வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அனைத்து தரப்பினரின் குரலுக்கும் மதிப்பு அளிப்போம்.

இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com