பணமதிப்பு நீக்கம்தான் மோடி அரசின் பெரிய ஊழல் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கருப்பு பணத்தை வெள்ளை ஆக்க உதவிய பணமதிப்பு நீக்கம்தான் மோடி அரசின் பெரிய ஊழல் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பணமதிப்பு நீக்கம்தான் மோடி அரசின் பெரிய ஊழல் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Published on

போபால்,

மத்தியபிரதேசத்தில் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அங்கு சென்றார். தேர்தல் பிரசாரத்தை தொடங்கும்வகையில், 15 கி.மீ. தூரத்துக்கு வாகன பேரணியாக சென்று மக்களை சந்தித்தார்.

அதில், ராகுல் காந்தி பேசியதாவது:-

70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், நரேந்திர மோடி அரசு பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தது. இந்த திட்டம், பணக்காரர்கள் தங்களது கருப்பு பணத்தை வெள்ளை ஆக்க உதவியது.

அதனால், 4 ஆண்டுகால மோடி அரசின் மிகப்பெரிய ஊழல் இதுதான். சிறு வணிகர்களின் கையில் உள்ள பணத்தை பறித்து 15 பெரும் பணக்காரர்களின் பாக்கெட்டில் போடுவதே இந்த திட்டத்தின் நோக்கம். 15 பெரு நிறுவனங்களின் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனை மோடி அரசு ரத்து செய்தது. ஆனால், வெறும் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கிய விவசாயிகளின் கடனை ஏன் ரத்து செய்யவில்லை?

லட்சங்களிலும், கோடிகளிலும் வாங்கப்பட்ட கடன்களை வாராக்கடன் என்கிறார்கள். ஆனால், வெறும் ரூ.5 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்தாத விவசாயியை கடன் தவறியவர் என்று முத்திரை குத்துகிறார்கள்.

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளின் ஒட்டுமொத்த கடன்களும் ரத்து செய்யப்படும். ஏற்கனவே இதுபோல் ரூ.70 ஆயிரம் கோடி விவசாய கடன்களை ரத்து செய்துள்ளோம். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com