

நாசிக்,
மராட்டிய மாநிலம் நாசிக் நகர் அருகே பிரம்மகிரி மலையடிவாரத்தில் கோதாவரி நதிக்கரையில் மிகவும் பிரசித்தி பெற்ற திரிம்பகேஷ்வர் கோவில் அமைந்துள்ளது. 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான திரிம் பகேஷ்வர் கோவிலுக்கு. உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்குள்ள சுயம்புலிங்கம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை குறிக்கும் வகையில் மூன்று சிறிய முகங்களுடன் காட்சியளிக்கிறது. இங்குள்ள லிங்கத்தில் எப்போதும் நீர் ஊற்றெடுத்துக்கொண்டிருப்பது சிறப்பம்சமாகும்
விதிமுறைகளின்படி இந்த கோவிலில் ரூ.200 கட்டணத்தில் தரிசன அனுமதி சீட்டு பெறும் வசதி உள்ளது. இந்தநிலையில் கடந்த 11-ந்தேதி இந்த கோவிலில் 2 பக்தர்களிடம் அதிகளவில் பணமோசடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் ரூ.200 மதிப்புள்ள தரிசன அனுமதி சீட்டுகள் இருந்தபோதிலும், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பக்தர்களை நம்பவைத்து 10 நிமிடங்களுக்குள் வி.ஐ.பி. தரிசனம் செய்ய வைப்பதாகக் கூறி ரூ.3 ஆயிரத்தை பெற்றுக்கொண்டார். பின்னர் அந்த நபரும், மற்றொருவரும் பக்தர்களை கோவிலுக்குள் செல்ல அனுமதித்தனர். ஆனால் அதற்கான ரசீது எதையும் வழங்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பக்தர்கள் நாசிக் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் கோவில் அறங்காவலரின் உறவினர் அபிஷேக் கட்லாக் மற்றும் கோதிராம் மனாஜி பெகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அறங்காவலர் புருஷோத்தம் கட்லாக்கிற்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் கடவுளை விரைவாக தரிசிக்க விரும்பும் பக்தர்களை குறிவைத்து கோவிலை சுற்றி ஏஜெண்டுகள் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதன் மூலம் பக்தர்களிடம் பெருமளவு பணமோசடி நடைபெறுவது கண்டறியப்பட்டது.
பின்னர் கைதான புருஷோத்தம் கட்லாக் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அவரை வருகிற 20-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் கோதிராம் மனாஜி பெஹர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான அபிஷேக் கட்லாக்கை போலீசார் தேடிவருகின்றனர்.