

புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தனது சுயசரிதையை 'பிலாங் கிங்: எ ஜர்னி ஆப் லவ்'(Belonging: A Journey of Love) என்ற பெயரில் எழுதி உள்ளார். அந்த புத்தகத்தில், சோனியா காந்தியின் குழந்தைப் பருவம், இளமைப் பருவ காதல், படிப்பு, ராஜீவ காந்தி படுகொலை, இந்திய அரசியலில் வருகை என வாழ்க்கையின் அனுபவங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன.
சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம் வெளியாகியுள்ள சமயத்தில், சுமார் 20 ஆண்டுகளுக்கு அவரது வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஒன்று தொடங்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்ட சம்பவம் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அதிலும் குறிப்பாக, சோனியா காந்தியின் கதாபாத்திரத்தில் ‘உலகின் மிக அழகான பெண்மணி’ என்று முன்னணி பத்திரிகைகளால் வர்ணிக்கப்பட்ட நடிகை மோனிகா பெலுசி நடிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த நடிகை மோனிகா பெலுசி, ‘மலேனா’(Malena), இர்ரிவர்சிபில்(Irreversible), பேஷன் ஆப் தி கிரைஸ்ட்(Passion of the Christ) போன்ற உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களில் நடித்தவர் ஆவார். கடந்த 2006-ம் ஆண்டு ‘சோனியா’ என்ற பெயரில் உருவாக இருந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக மோனிகா பெலுசி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அது தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகின.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி இயக்குநர் ஜக்மோகன் முந்த்ரா என்பவர் இந்த படத்தை இயக்க இருந்தார். பத்திரிகையாளர் ராஷித் கித்வாய் என்பவர் எழுதிய ‘சோனியா: ஒரு சுயசரிதை’ என்ற புத்தகத்தை தழுவி அந்த படம் எடுக்கப்பட இருந்தது. அந்த சமயத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், சோனியா காந்தியின் பயோபிக் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் படக்குழுவினருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து படத்தை எடுக்கும் முயற்சி கைவிடப்பட்டது.
அந்த படத்தை தயாரிக்க இருந்த தயாரிப்பாளர் மனோகர், கடந்த 2017-ம் ஆண்டு உயிரிழந்தார். அவர் முன்னதாக ஒரு பத்திரிக்கைக்கு அளித்திருந்த பேட்டியில், “நாங்கள் சுமார் 60 நாட்களில் படப்பிடிப்பை தொடங்க இருந்தோம். ஆனால் காங்கிரஸ், இந்தியாவில் மிகப்பெரிய அரசியல் கட்சி. அவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணாமால் எங்களால் மேற்கொண்டு படத்தை தொடர முடியவில்லை” என்றார்.
படத்தை இயக்க இருந்த இயக்குநர் ஜக்மோகன் முந்த்ரா கூறுகையில், “சோனியா காந்தி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இத்தாலியில் ஒரு சாதாரண சிறுமியாக இருந்தவர், பின்னாட்களில் இந்தியாவைப் போன்ற ஒரு மாபெரும் தேசத்தில் மிகப்பெரிய அரசியல் தலைவராக வருவார் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.
அவரது வாழ்க்கை குறித்து நான் நன்றாக ஆய்வு செய்திருந்தேன். அதுபற்றி சோனியா காந்தியிடம் கூட பேசியிருந்தேன். ஆனால் காங்கிரஸ் எனது கருத்தை ஏற்கவில்லை. அந்த படம் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும் என்றும், விளம்பரத்தை நோக்கமாக கொண்டு அந்த படம் எடுக்கப்படுகிறது என்றும் காங்கிரஸ் கட்சி கூறியது” என்றார். ஹாலிவுட்டில் பல திரில்லர் படங்களை இயக்கிய ஜக்மோகன் முந்த்ரா, கடந்த 2011-ம் ஆண்டு உயிரிழந்தார்.
இதனிடையே, நடிகை மோனிகா பெலுசி இந்த படத்தில் நடிக்காதது குறித்த காரணங்களை கூறியிருந்தார். 2012-ம் ஆண்டு ஒரு பேட்டியில், “ஒரு இந்திய திரைப்படத்தில் சோனியா காந்தி கதாபாத்திரத்தில் நடிக்க என்னை அணுகினார்கள். ஆனால் எனக்கு அந்த கதை பிடிக்கவில்லை, அதனால் நான் அதில் நடிக்கவில்லை” என்றார். மற்றொரு சமயம், “அந்த திரைப்படத்தில் நான் நடிக்காததற்கு பல காரணங்கள் இருக்கின்றன” என்று தெளிவற்ற விளக்கத்தை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.