உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங்கை தடுக்க கண்காணிப்பு தேவை: மனித உரிமை ஆணைய தலைவர்

திடீர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என மனித உரிமை ஆணைய தலைவர் வி.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்
புதுடெல்லி,
டெல்லியில், தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தலைமையில் ‘ராகிங்’ தடுப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.அதில் ஆணைய தலைவர் வி.ராமசுப்பிரமணியன் பேசியதாவது:-
உயர்கல்வி நிறுவனங்களில் ‘ராகிங்’ நடப்பது கவலை அளிக்கிறது. எண்ணற்ற சட்டங்கள், விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், அவற்றை அமல்படுத்துவது சவாலாக இருக்கிறது.ராகிங்கை தடுக்க கடுமையான கண்காணிப்பு முறையை பின்பற்ற வேண்டும். சட்டங்களை கண்டிப்பாக அமல்படுத்துவதுடன், புகார்களை உணர்வுபூர்வமாக கையாள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் இன்றி புகார்களை முடிக்கக்கூடாது. கல்வி நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். 24 மணி நேர உதவி மையம் அமைக்க வேண்டும். திடீர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






