

பரிதாபாத்,
அரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோரை கடித்து காயப்படுத்திய குரங்கு, ரூ.51 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உள்ளூர் மக்களால் லாவகமாக பிடிக்கப்பட்டது. ஹதின் பகுதியில் நேற்று அந்தக் குரங்கை உள்ளூர் மக்கள் பிடித்தனர். அப்போது சிலர் குரங்கை அறைந்தும், குச்சிகளால் தாக்கியும் உள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பல்வால் மாவட்டம் ஹதின் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு குரங்கு பொதுமக்களைத் தாக்கி வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் குரங்கு 30-க்கும் மேற்பட்டோரை கடித்து காயப்படுத்தியதாக ஹதின் நகராட்சி மன்றத் தலைவர் ரேணு லதாவின் உதவியாளர் சுமித் ராஜ்புத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அந்தக் குரங்கைப் பிடிப்பவர்களுக்கு தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.51 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று நகராட்சி மன்றத் தலைவர் அறிவித்திருந்தார்.
குரங்கு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒருவர் அதனைத் தனது தோளில் சுமந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்தக் குரங்கின் கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில், பின்னால் வந்த சிலர் அதனை அறைந்தும், குச்சிகளால் தாக்கியும் சென்றனர்.
மேலும், குரங்கு பிடிக்கப்படுவதற்கு முன்பு உயரமான தண்ணீர் தொட்டியில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டதாகக் காட்டும் மற்றொரு வீடியோவும் பரவி வருகிறது.
இதுகுறித்து சுமித் ராஜ்புத் கூறுகையில், இதுவரை 3 குரங்குகள் பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், ஆக்ரோஷமாகச் செயல்படும் குரங்குகளைப் பிடிப்பதற்காகத் தனியார் குழு ஒன்றும் வரவழைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்தப் பகுதியில் இதுபோன்ற குரங்குகள் நூற்றுக்கணக்கில் இருப்பதாக உள்ளூர் மக்கள் அச்சமுடன் கூறுகின்றனர். குரங்குகளைப் பிடிப்பதற்காக நகராட்சி நிர்வாகம் ஒப்பந்தப்புள்ளி கோரும் நடைமுறையைத் தொடங்கியுள்ளபோதிலும், இதுவரை அலட்சியமான பதிலே கிடைத்து வருவதாக உள்ளூர் மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
குரங்குகளின் தாக்குதலைத் தடுக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போதிய எண்ணிக்கையில் குழுக்களைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், குரங்குகளைப் பிடிக்கும்போது பாதுகாப்பான மற்றும் மனிதாபிமான முறைகளைக் கையாள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.