மழைக்கால கூட்டத்தொடர்: மக்களவையில் 12, மாநிலங்களவையில் 15 மசோதாக்கள் நிறைவேற்றம்


மழைக்கால கூட்டத்தொடர்: மக்களவையில் 12, மாநிலங்களவையில் 15 மசோதாக்கள் நிறைவேற்றம்
x

Image Courtesy : PTI

தினத்தந்தி 21 Aug 2025 3:59 PM IST (Updated: 21 Aug 2025 4:21 PM IST)
t-max-icont-min-icon

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21-ந்தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்தும், பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

மொத்தம் 32 நாட்கள் அவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், ஆகஸ்டு 12-ந்தேதிக்கு பின்னர் சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு 5 நாட்கள் நாடாளுமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டது. இதன்பின்பு கடந்த 18-ந்தேதி அவை மீண்டும் தொடங்கியது.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அவையில் சிறப்பு விவாதம் நடந்தது. இதற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசியதுடன் விவாதம் முடிவடைந்தது. எனினும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி விவாதிக்க கோரி தொடர்ந்து அவை நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தன. இதனால், அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் 12 மசோதாக்களும், மாநிலங்களவையில் 15 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

கூட்டதொடரை ஒத்திவைப்பதற்கு முன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், “இந்த கண்ணியம் வாய்ந்த அவையில், கோஷங்களையும், இடையூறுகளையும் நாம் தவிர்க்க வேண்டும். அவையில் ஆரோக்கியம் நிறைந்த மரபுகளை கட்டமைப்பதற்காக ஒத்துழைப்பது என்பது நம் அனைவரின் கடமையாகும்” என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தொடரின்போது, கோவா மாநில சட்டமன்றத் தொகுதிகளில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைத்தல் மசோதா, வணிகக் கப்பல் மசோதா, மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா, மணிப்பூர் ஒதுக்கீட்டு (எண்.2) மசோதா, தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா, மற்றும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு (திருத்தம்) மசோதா ஆகியவை மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.

மேலும் மக்களவையில், வருமான வரி மசோதா, வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்தம்) மசோதா, இந்திய துறைமுக மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (திருத்தம்) மசோதா மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா ஆகிய மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதே சமயம் மாநிலங்களவையில், மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் எந்த இடையூறும் இல்லாமல் சரக்கு ஏற்றும் மசோதா(The Bills of Lading Bill) 2025-ஐ தவிர, மற்ற மசோதாக்கள் கூச்சல் குழப்பங்களுக்கு இடையே சிறிது விவாதத்திற்குப் பிறகு அல்லது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பின்னரே நிறைவேற்றப்பட்டன.

மாநிலங்களவையில் கடல் வழியாக பொருட்களை எடுத்துச் செல்லும் மசோதா, கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா, மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா, மணிப்பூர் ஒதுக்கீட்டு மசோதா (எண்.2) மசோதா, வணிகக் கப்பல் போக்குவரத்து மசோதா, கோவா மாநில சட்டமன்றத் தொகுதிகளில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைத்தல் மசோதா, தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு (திருத்தம்) மசோதா, வருமான வரி மசோதா, வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்தம்) மசோதா, இந்திய துறைமுக மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (திருத்தம்) மசோதா மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா ஆகிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற அவை நடவடிக்கை குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த முறை நாடாளுமன்றத்தில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது, எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லை. இந்த பிடிவாதமான நடத்தை காரணமாக, நிறைவேற்றப்பட்ட பல முக்கியமான மசோதாக்கள் மீதான விவாதங்களில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கத் தவறிவிட்டன” என்று தெரிவித்தார். கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், மக்களவையை தொடர்ந்து மாநிலங்களையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

1 More update

Next Story