100 நாட்கள் ஆகியும் முடித்துவைக்கப்படாத மழைக்கால கூட்டத்தொடர்; சிறப்பு கூட்டம் நடைபெறுமா?

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான அரசியல் சாசன திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
மழைக்கால கூட்டத்தொடர்
Published on: 

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்து 100 நாட்களாகியும், இதுவரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு 13-ந்தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் இதுவரை அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்படவில்லை. இதன் மூலம் 100 நாட்களாக கூட்டத்தொடர் முடிவுக்கு வராமல் நீடிப்பது புதிய சாதனையாகியுள்ளது. இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு 87 நாட்கள் கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படாமல் இருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா

இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான அரசியல் சாசன திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் அல்லது நீட்டிக்கப்பட்ட கூட்டத்தொடரை கூட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த மசோதா நிறைவேறினால், தொகுதி மறுவரையறை மூலம் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-ல் இருந்து அதிகபட்சம் 850 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 ஆகவே தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது. இதற்கிடையே, சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறும் தேதி மற்றும் கால அளவு குறித்து மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெறுமா அல்லது குளிர்கால கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா எடுத்துக்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பு நீடிக்கிறது.

X