’மோந்தா புயல்’ ஆந்திராவில் உஷார் நிலை: சந்திரபாபு நாயுடுவுடன் பிரதமர் மோடி பேச்சு

காக்கிநாடாவுக்கு அருகில் இன்று மாலை அல்லது இரவு 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் மோந்தா புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
’மோந்தா புயல்’ ஆந்திராவில் உஷார் நிலை: சந்திரபாபு நாயுடுவுடன் பிரதமர் மோடி பேச்சு
Published on

அமராவதி,

 மோந்தா புயல் செவ்வாய்க்கிழமை தீவிர புயலாக மாறி, ஆந்திராவில் கரையைக் கடக்க வாய்ப்புள்ள நிலையில், அந்த மாநிலத்தில் பலத்த மழை மற்றும் வெள்ள அபாயத்துக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆந்திர மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடுவை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தினார். வங்கக்கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல், ஆந்திரத்தின் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே, காக்கிநாடாவுக்கு அருகில் இன்று மாலை அல்லது இரவு 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்புயலின் தாக்கத்தால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு அதிதீவிர மழைக்கும், உள்மாவட்டங்களில் தீவிர மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆய்வுக்கூட்டம் நடத்தினார். மழை மற்றும் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மீட்பு பணிகளுக்காக பேரிடர் மீட்புக்குழுவினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். என்.டி.ஆர்., திருப்பதி, பிரகாசம், கோனசீமா, அனகாபள்ளி, ராஜமஹேந்திரவரம், பாபட்லா, அன்னமய்யா, ஏலூரு ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மாநில பேரிடர் மீட்புப் படை குழுவை அரசு நிலைநிறுத்தியுள்ளது.

இதனிடையே, சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி, புயல் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com