

புதுடெல்லி,
நாட்டில் கொரோனா வைரசின் புதிய அலையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 15ந்தேதி முன்பு வரை, ஒரு வாரத்திற்கு இந்தியாவில் நாள்தோறும் பாதிப்படைவோரின் எண்ணிக்கை 1 லட்சம் என்ற அளவை கடந்து பதிவானது. பின்னர் அந்த எண்ணிக்கை 1.5 லட்சம் என்ற அளவையும் கடந்தது.
இந்நிலையில், கடந்த 15ந்தேதி முதன்முறையாக நாட்டில் ஒரே நாளில் 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதன்பின்னர் தொடர்ச்சியாக 2 லட்சத்திற்கு கூடுதலான பாதிப்புகளை நாடு சந்தித்து வருகிறது.
கொரோனாவின் புதிய அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு மிக அதிகம் ஆகும். இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,61,919 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) இயக்குனர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா அளித்துள்ள பேட்டியில், கொரோனா அறிகுறிகளை காணும்பொழுது, இந்த முறை தீவிரம் குறைந்து உள்ளது.
கடந்த அலையில் வறட்டு இருமல், மூட்டு வலி, தலைவலி ஆகியவை அதிகளவில் காணப்பட்டன. ஆனால், கொரோனாவின் புதிய அலையில், மூச்சு திணறல் அதிகளவில் காணப்படுகிறது.
கொரோனாவுக்கான பரிசோதனையில் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை மிக சிறந்தது. ஏனெனில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட மரபணுக்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அதனால், உருமாற்றம் அடைந்து வருவது உள்பட எந்தவொரு கொரோனா வைரசையும் கண்டறிவது விடுபட்டு போவதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.