இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுகிறவர்களை விட1 லட்சத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்துள்ளனர் - மத்திய அரசு புள்ளி விவரம்

இந்தியாவில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்போரை விட 1 லட்சத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி இருப்பதாக மத்திய அரசு புள்ளி விவரம் காட்டுகிறது.
இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுகிறவர்களை விட1 லட்சத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்துள்ளனர் - மத்திய அரசு புள்ளி விவரம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று, நாளுக்கு நாள் தீவிரமாகி வேகம் எடுத்தபடியே இருக்கிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தினமும் புதிது புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அந்தப் பதற்றம் தேவையற்றது என்பதை கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் இந்தியாவின் நிலவரம் குறித்த மத்திய அரசின் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 859 ஆகும். இந்த நோய்க்கு சிகிச்சை செய்தும் பலனற்ற நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 095 ஆக உள்ளது.

அதே நேரத்தில் தற்போது நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுவோரைக்காட்டிலும், 1 லட்சத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்து வீடு திரும்பி இருப்பது, நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.

நேற்று வரையில் கொரோனாவுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை செய்து கொண்டு, குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 9 ஆயிரத்து 712 ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 832. தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 3 ஆயிரத்து 51 ஆக இருக்கிறது. அந்த வகையில் தற்போது சிகிச்சை பெறுவோரைவிட, கூடுதலாக 1 லட்சத்து 6 ஆயிரத்து 661 சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இதனால் குணம் அடைந்தோர் அளவு 58.56 சதவீதமாக இருக்கிறது.

பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு மிக குறைவாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியபோது இதற்கான பரிசோதனை நடத்துவதற்கு ஒரே ஒரு பரிசோதனைக்கூடம்தான் இருந்தது. இந்த 6 மாத காலத்தில் இப்போது 1,036 பரிசோதனைக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் அரசு தரப்பில் 749 பரிசோதனைக்கூடங்களும், தனியார் துறையில் 287 பரிசோதனைக்கூடங்களும் அடங்கும். பரிசோதனைக்கூடங்கள் அதிகரித்து வருவதுபோல கொரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கிறது.

தற்போது தினந்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 95 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று வரை இந்தியாவில் 82 லட்சத்து 27 ஆயிரத்து 802 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பெருகி வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நேற்று நிலவரப்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு என அர்ப்பணிக்கப்பட்ட 1,055 ஆஸ்பத்திரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 1 லட்சத்து 77 ஆயிரத்து 529 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளும், 23 ஆயிரத்து 156 தீவிர சிகிச்சை படுக்கைகளும் உள்ளன. ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 60 ஆக உயர்ந்துள்ளனது.

அர்ப்பணிக்கப்பட்ட கொரோனா சுகாதார மையங்களின் எண்ணிக்கையும் 2,400 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 99 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதி உள்ளது. தீவிரசிகிச்சை பிரிவில் 11 ஆயிரத்து 508 படுக்கைகள் போடப்பட்டுள்ளன. ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 371 ஆகஇருக்கிறது. இவற்றுடன் கொரோனா வைரஸ் சுகாதார மையங்கள் என 9,519 மையங்கள் உள்ளன. அவற்றில் 8 லட்சத்து 34 ஆயிரத்து 128 படுக்கை வசதி உள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்களப்பணியாற்றுவோருக்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 1 கோடியே 87 லட்சத்து 43 ஆயிரம் என்-95 முக கவசங்களும், 1 கோடியே 17 லட்சம் சுய பாதுகாப்பு கவச உடை, கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com