

போபால்,
மத்திய பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம திருவிழாவில், நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 12 பெரியவர்கள், கெட்டுப்போன உணவை சாப்பிட்டதாலேயே அனைவருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாலாகாட் மாவட்டம் ஹிரி கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் விற்பனை செய்யப்பட்ட நூடுல்ஸை சாப்பிட்ட பலருக்கும் சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்று வலி மற்றும் உடல்நல குறைவு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட 118 குழந்தைகள் உடனடியாக கிர்னாபூரில் உள்ள சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 73 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில், 45 குழந்தைகள் மற்றும் 12 பெரியவர்கள் மேல் சிகிச்சைக்காக பாலாகாட் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
மாவட்ட கலெக்டர் ஆதித்யா சிங் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்ததுடன், அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் தடையின்றி வழங்குமாறு மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.
கெட்டுப்போன உணவே இதற்கு காரணம் என கருதப்படும் நிலையில், மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 45 குழந்தைகள் மற்றும் 12 பெரியவர்கள் அனைவரும் தற்போது நலமாக உள்ளதாக தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.