

புதுடெல்லி,
கொரோனா தொற்று தொடர்பான 27-வது மந்திரிகள் குழு கூட்டத்தில் நேற்று பேசிய மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் கூறியதாவது:- நாட்டில் 18 மாநிலங்களில் 5 ஆயிரத்து 424 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக குஜராத்தில் 2 ஆயிரத்து 165 பேருக்கும், மராட்டியத்தில் ஆயிரத்து 188 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 556 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள். அதேநேரம் கொரோனாவுக்கு ஆட்படாத 875 பேரையும் கருப்பு பூஞ்சை தாக்கியுள்ளது. இதன் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 55 சதவீதம் பேர் நீரிழிவு நோயாளிகள்.
நாட்டில் தொடர்ந்து 11-வது நாளாக, கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை விட, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
அதேபோல தொடர்ந்து 8-வது நாளாக, புதிய பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்துக்கு குறைவாக உள்ளது. இது ஒரு நல்ல அறிகுறியாகும்.நாம் ஏற்கனவே மக்களுக்கு 19.6 கோடி டோஸ் தடுப்பூசி போட்டுள்ளோம். மாநிலங்களில் தற்போது 60 லட்சம் டோஸ்களுக்கு அதிகமான தடுப்பூசிகள் உள்ளன. மேலும் 21 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை வழங்கவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.