"ராஜினாமா முடிவை தன்கர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" - ஜெய்ராம் ரமேஷ்

துணை ஜனாதிபதி பதவியில் இருந்து தன்கர் திடீரென ராஜினாமா செய்தது குறித்து ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுடெல்லி,
நாட்டின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் ஜெகதீப் தன்கர். ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள கிதானாவில், கோகல் சந்த், கேசரி தேவி தம்பதிக்கு கடந்த 1951-ம் ஆண்டு மே 18-ந் தேதி பிறந்த ஜெகதீப் தன்கர், பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி மற்றும் எல்.எல்.பி. பட்டம் பெற்றார்.
பின்னர் வழக்கறிஞராக பணியை தொடங்கிய அவர், அரசியலில் குதித்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.வாக இருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை மேற்கு வங்காள கவர்னராக பணியாற்றினார். இதையடுத்து 2022-ம் ஆண்டு துணை ஜனாதிபதியானார்.
இந்தநிலையில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது உடல் நிலையை காரணம் காட்டி, துணை ஜனாதிபதி பதவியை நேற்று இரவு திடீரென்று ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பிவைத்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று கூடியது. முதல் நாளே மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெகதீப் தன்கர் மேற்கு வங்காள கவர்னராக இருந்தபோது அவருக்கும், முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் கருத்து வேறுபாடு அதிகம் இருந்தது. மாநில அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இதேபோல் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஜனாதிபதி, கவர்னர்களுக்கு காலம் நிர்ணயம் செய்து சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்தும் விமர்சனம் செய்தார். மேலும் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில், பணக்கட்டுகள் சிக்கியபோது, ஜெகதீப் தன்கர் தெரிவித்த கருத்துகள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
டெல்லியில் நடந்த மராட்டிய மாநாட்டில் பேசிய ஜெகதீப் தன்கர், கலாசாரத்தில் இந்தியா தனித்துவமானது. ஒரு மாநிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் கலாசாரத்தை பின்னுக்கு தள்ளி, அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி என்றார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1969-ம் ஆண்டு துணை ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி, அதே ஆண்டு ஜூலை 20-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பின்னர் துணை ஜனாதிபதி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்வது இப்போதுதான் நடந்துள்ளது.
இந்நிலையில் துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தது குறித்து ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
துணை ஜனாதிபதி மற்றும் மாநிலங்களவைத் தலைவரின் திடீர் ராஜினாமா புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அதிர்ச்சியளிக்கிறது. இன்று (நேற்று) மாலை சுமார் 5 மணி வரை நான் அவருடன் பல எம்.பி.க்களுடன் இருந்தேன், இரவு 7:30 மணிக்கு தொலைபேசியில் அவருடன் பேசினேன்.
சந்தேகத்திற்கு இடமின்றி, தன்கர் தனது உடல்நிலைக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால், அவரது முற்றிலும் எதிர்பாராத ராஜினாமாவில் கண்ணுக்குத் தெரிவதை விட அதிகமான விஷயங்கள் உள்ளன என்பது தெளிவாகிறது. இருப்பினும், இது ஊகங்களுக்கு ஏற்ற நேரம் அல்ல. தன்கர் அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் சமமாக விமர்சித்தார். நாளை (இன்று) மதியம் 1 மணிக்கு அலுவல் ஆலோசனைக் குழு கூட்டத்தை அவர் ஏற்பாடு செய்திருந்தார். நாளை (இன்று ) நீதித்துறை தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட இருந்தார்.
அவர் நலம் பெற வாழ்த்துகிறோம், ஆனால் அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். பிரதமர், ஜெகதீப் தங்கரை அவரது மனதை மாற்றச் செய்வார் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது நாட்டின் நலனுக்காக இருக்கும். குறிப்பாக விவசாய சமூகம் பெரிதும் நிம்மதியடையும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






