ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்ட ஆய்வுப்பணிகள் நடந்து வருகிறது - சட்ட கமிஷன் தகவல்

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கான ஆய்வுப்பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும், பரிந்துரை அறிக்கை அளிப்பதற்கு எந்த காலக்கெடுவும் இல்லை எனவும் சட்ட கமிஷன் தெரிவித்து உள்ளது.
Image Courtacy: ANI
Image Courtacy: ANI
Published on

புதுடெல்லி,

சிக்கலான சட்ட பிரச்சினைகளில் அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்ட கமிஷன் அமைக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக இந்த சட்ட கமிஷன் ஏற்கனவே ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் பல ஆண்டுகளாக சட்ட கமிஷனின் பரிசீலனையில் இருந்து வருகிறது.

பல்வேறு பரிந்துரைகள்

ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது ஜனநாயகம், அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு அல்லது நாட்டின் கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றுடன் எந்த வகையிலும் முரண்படுமா? என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினருடனும் இந்த கமிஷன் கருத்துகளை கேட்டிருந்தது.

இதைப்போல எந்த அரசியல் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் என்ற சூழல் வந்தால் அதை சமாளிப்பது தொடர்பாகவும் ஆலோசனைகள் பெறப்பட்டு உள்ளன. அவற்றின் அடிப்படையில் 3 கருத்துகளை முந்தைய சட்ட கமிஷன் வழங்கியிருந்த நிலையில், பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் உள்ளது.

அறிக்கை இறுதி செய்யவில்லை

இந்த நிலையில் தற்போதைய சட்டக் கமிஷன் இந்த விஷயத்தில் அடுத்தகட்ட ஆய்வுப்பணிகளை தொடங்கி இருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் தற்போது வேகம் பெற்று வரும் நிலையில், சட்ட கமிஷனின் நிலை குறித்த கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆய்வுப்பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக சட்ட கமிஷன் கூறியுள்ளது.

சட்ட கமிஷனின் தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான ரிதுராஜ் அவஸ்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக இன்னும் சில பணிகள் நடைபெற வேண்டியுள்ளது. நாங்கள் அறிக்கையை இன்னும் இறுதி செய்யவில்லை. அதற்காக காலக்கெடு எதுவும் இல்லை' என தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சட்ட அமைச்சகத்துக்கு வழங்கப்படும் அறிக்கை பின்னர் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com