2014-2017-ல் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகளில் 93 சதவீதம் எருமை, காளைகளின் இறைச்சி

போலீஸ் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட 112 இறைச்சி மாதிரிகளை இறைச்சிக்கான தேசிய ஆராய்ச்சி மையம் பகுப்பாய்வு செய்தது.
2014-2017-ல் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகளில் 93 சதவீதம் எருமை, காளைகளின் இறைச்சி
Published on

2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையில் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகளில் 93 சதவீதம் எருமை, காளைகளின் இறைச்சியென்று தெரியவந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் போலீஸ் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட 112 இறைச்சி மாதிரிகளை இறைச்சிக்கான தேசிய ஆராய்ச்சி மையம் பகுப்பாய்வு செய்தது. இதில் 7 சதவீதம் மட்டுமே பசுக்களின் இறைச்சியென்று தெரியவந்துள்ளது என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

ஐதராபாத்தை தலைமையகமாக கொண்டு செயல்படும் இறைச்சிக்கான தேசிய ஆராய்ச்சி மையம் 112 இறைச்சிகளின் மாதிரியை ஆய்வு செய்துள்ளது. இதில் 8 இறைச்சி மாதிரி மட்டுமே பசு இறைச்சியாகும். உத்தரபிரதேசம், மராட்டியம், பீகார், கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப், சத்தீஷ்கார், கோவா, ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் இருந்து இறைச்சி மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு மையத்திற்கு 139 மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது. 112 மாதிரிகள் மட்டுமே டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தும் வகையில் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசு இறைச்சியாக இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் பரிசோதனை செய்யப்பட்ட மூன்று இறைச்சி மாதிரிகள் ஒட்டகத்தின் இறைச்சியென்று தெரியவந்துள்ளது. இதேபோன்று நாய்கறி என்று சந்தேகப்பட்டது ஆட்டிறைச்சியென தெரியவந்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2018-ம் ஆண்டு ஆய்வு மையத்திற்கு 80 மாதிரிகள் வந்துள்ளது. இதனுடைய ஆய்வு அறிக்கையை மையம் இன்னும் வெளியிடவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com