

பெங்களூரு,
கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட பெண், அதற்கு இடையூறாக இருந்த கணவனை அடித்துக் கொலை செய்தார். இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த தனது 4 வயது பெற்ற மகனையும், இரக்கமின்றி தலையணையால் முகத்தை அமுக்கி கொன்ற சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு சிக்பனாவாரா பகுதியை சேர்ந்தவர் அபிநந்தன் (வயது 34). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி ஹரிணி. இந்த தம்பதிக்கு யதுவீர் (4) என்ற மகன் இருந்தான். இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளம் மூலமாக ஹரிணிக்கும் வினய் என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் அபிநந்தனுக்கு தெரியவந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கணவன் உயிருடன் இருந்தால் தங்களால் சேர்ந்து வாழ முடியாது என கருதிய ஹரிணியும், அவரது கள்ளக்காதலன் வினய்யும், அபிநந்தனை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அபிநந்தன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, ஹரிணியும், கள்ளக்காதலன் வினய்யும் சேர்ந்து அவரது தலையை சுவற்றில் பல முறை மோதியும் அவரது கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்தனர்.
அப்போது, சத்தம் கேட்டு அருகில் தூங்கி கொண்டிருந்த 4 வயது மகன் யதுவீர் திடீரென கண் விழித்தான். தனது தந்தை ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறப்பதை அந்த பிஞ்சு குழந்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தது.
தந்தை கொலை செய்யப்பட்டதை மகன் பார்த்துவிட்டதால், அவன் வெளியில் கூறிவிடுவான் என்று ஹரிணி பயந்தாள். தாய்ப்பாசத்தை மறந்த ஹரிணி, பெற்ற மகன் என்றும் பாராமல், படுக்கையில் கிடந்த குழந்தை யதுவீரின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கினாள். இதில் மூச்சுத்திணறி அந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பின்னர், கொலையை மறைப்பதற்காக வீட்டில் சிதறிக்கிடந்த ரத்தக்கறைகளை இருவரும் தண்ணீரை ஊற்றி கழுவி சுத்தம் செய்தனர்.
அபிநந்தனின் ரத்த கறை படிந்த ஆடைகளை மாற்றி இரவு அவற்றை துவைத்தார். பின்னர். குழந்தையின் மீது படுத்துக்கொண்டு, அவனை மூச்சுத்திணறடித்து கொன்றது போல் காட்ட முயன்றார் என்பது தெரியவந்தது.விடிந்ததும், கணவனும் மகனும் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக கூறி உறவினர்களை நம்ப வைக்க நாடகமாடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிக்பனாவாரா போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாருக்கு ஹரிணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில், அபிநந்தன் தாக்கப்பட்டும், குழந்தை மூச்சுத்திணறியும் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் ஹரிணியை பிடித்து தங்களது பாணியில் விசாரித்தபோது, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் மற்றும் மகனை இரட்டைக்கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் ஹரிணி கைது செய்தனர். தலைமறைவாக இருந்த வினயை கனகபுரா அருகே உள்ள ஹெரோஹள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போ போலீசார் தேடினர். நேற்று அதிகாலையில் போலீசார் அங்குள்ள அவரது வீட்டில் வைத்து வினயை கைது செய்தனர்.
கள்ளக்காதலுக்காக பெற்ற மகனையே தாய் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.