

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கிழக்கு பெங்களூரில் தனது காதலை ஏற்க மறுத்த தாய், தந்தை, சகோதரியை கத்தியால் குத்திக் கொலை செய்த காதல் ஜோடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் கிழக்கு பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீகேஹள்ளியில் உள்ள தம்னிகா லே அவுட்டில் இருக்கும் சாய் அபார்ட்மென்ட் என்ற குடியிருப்பில் சோதசுந்தர் (வயது 55), இவரது மனைவி முத்துலட்சுமி (48), இவர்களது இளைய மகள் சுப்ரியா(20) ஆகியோர் நேற்று இரவு கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு பிணமாக வெள்ளத்தில் கிடந்தனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கே.ஆர்.புரம் போலீசார் பிணமாக கிடந்த 3 பேர் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் தம்பதியரின் மூத்த மகளான ஸ்வேதாவும், அவரது காதலன் கென்னத்தும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் 1 1/2 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். இந்த காதல் உறவை ஸ்வேதாவின் பெற்றோர் எதிர்த்தனர். அதனால் குடும்பத்திற்குள் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சோமசுந்தர், முத்துலட்சுமி இளைய மகள் சுப்ரியா ஆகியோர் நேற்று இரவு 7 மணியளவில் மூத்த மகள் ஸ்வேதாவை சந்திக்க சென்றிருந்தனர். அப்போது கென்னத்துடனான ஸ்வேதாவின் உறவுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. இதனால் ஸ்வேதாவும், கென்னத்தும் சேர்ந்து சோமசுந்தர், முத்துலட்சுமி, சுப்ரியா ஆகியோரை சுத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று விட்டனர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவான காதல் ஜோடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காதலை ஏற்க மறுத்த தாய், தந்தை, சகோதரியை காதலனுடன் சேர்ந்து இளம்பெண் தீர்த்துக்கட்டிய சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.