

மலப்புரம்,
கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் பூக்கோட்டு பாடம் அருகே கூற்றம்பாரா பகுதியை சேர்ந்தவர் சாந்தா (வயது 58). இவரது மகன் சுனில். இவருடைய மனைவி ரஜீலா (30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுனில் ஆட்டோ டிரைவராக உள்ளார். இதற்கிடையே மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று காலை சுனில் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் ரஜீலா, அவரது குழந்தைகள், சாந்தா ஆகியோர் இருந்தனர். அப்போது டீ போட்டு தருமாறு ரஜீலாவிடம் சாந்தா கூறியுள்ளார். ஆனால், ரஜீலா மாமியாருக்கு டீ தராமல் இருந்துள்ளார். இதனால் சாந்தா மீண்டும், மீண்டும் டீ கேட்டு உள்ளார். அவ்வாறு கேட்டும் குடிப்பதற்கு மருமகள் டீ போட்டு தரவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த சாந்தா, வீட்டில் விறகு வெட்ட வைத்திருந்த அரிவாளால் ரஜீலாவை சரமாரியாக வெட்டினார். இதை அங்கிருந்த ரஜீலாவின் குழந்தைகள் தடுக்க முயன்றும், அது முடியாமல் போனது. இதனால் ரஜீலா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதை பார்த்த குழந்தைகள் கதறி அழுதனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து, ரஜீலாவை மீட்டு மலப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த பூக்கோட்டு பாடம் போலீ சார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், குடிப்பதற்கு டீ போட்டு தராததால் மருமகளை மாமியார் வெட்டி கொன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சாந்தாவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.