வெப் சீரிஸ் பார்த்து சீரியல் கொலை, கொள்ளைகளை அரங்கேற்றிய தாய்-மகன் கைது - விசாரணையில் திடுக் தகவல்

அன்னபூர்ணா என்ற பெண்ணிடம் இருந்து 5 தோலா தாலி சங்கிலி கொள்ளையடித்ததிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கும் என போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.
தெலுங்கானா
Published on

சித்திப்பேட்டை

தெலுங்கானாவில் வெப் சீரிஸ் பார்த்து சீரியல் கொலை, கொள்ளைகளை அரங்கேற்றிய தாய் மற்றும் மகன் கைது செய்யப்பட்டனர்.

தெலுங்கானாவின் சித்திப்பேட்டை நகரில் ராமக்காபேட்டை பகுதியில் வயல்வெளியில் கடந்த 8-ந்தேதி அடையாளம் தெரியாத, பகுதியளவு எரிந்த பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

விசாரணையில் அவர், பூம்பள்ளி கிராமத்தில் வசித்த, அதிகம் விஜயா (வயது 45) என தெரிய வந்தது. இதுபற்றி சித்திப்பேட்டை காவல் ஆணையாளர் ராஷ்மி பெருமாள் கூறும்போது, பூம்பள்ளி கிராமத்தில் துப்பய்யா என்பவரின் மனைவி சக்காளி ரஜிதா (வயது 38) மற்றும் அவருடைய மைனர் மகன் இருவரும் சேர்ந்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்றார்.

உடல் எரிப்பு

அவர்கள் 2 பேரும் பெண்களை நோட்டமிடுவதுடன், அவர்களிடம் உள்ள பணம், நகை, சொத்துகள் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்வார்கள். பின்னர், அவர்களிடம் உள்ள பணம், நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி விடுவர்.

விஜயா விசயத்தில், ரஜிதா மற்றும் அவருடைய மகன் 2 பேரும் தங்களுடைய மளிகை கடையில் வைத்து பேசி கொண்டிருந்தபோது, விஜயாவை தாக்கி கொலை செய்தனர். பின்னர், உடலை மொபட்டில் எடுத்து சென்று எரித்துள்ளனர் என்றார்.

மற்றொரு பெண் கொலை

இதேபோன்று, அச்சமயப்பள்ளி வன பகுதியில், கடந்த மே 28-ந்தேதி எரிந்த நிலையில் கிடந்த குந்தா ரேகா என்ற பெண்ணின் கொலை சம்பவத்திலும், இந்த 2 பேருக்கும் தொடர்பு உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஜூனில் அன்னபூர்ணா என்ற பெண்ணிடம் இருந்து 5 தோலா தாலி சங்கிலி கொள்ளையடித்ததிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கும் என போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.

வெப் சீரிஸ்

இதுவரை 2 பேரிடம் இருந்து 5 தோலா (1 தோலா என்பது 11 கிராம்) தங்கத்திலான தாலி சங்கிலி, 53 தோலா வெள்ளி, ரூ.1.03 லட்சம் பணம், 2 மொபைல் போன்கள் மற்றும் மொபட் ஒன்று என ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

அவர்கள் குற்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, வெளிவரக்கூடிய வெப் சீரிஸ்களை பார்த்து பல்வேறு திட்டங்களை தீட்டி வந்தனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது என போலீசார் கூறினர். வேறு குற்ற சம்பவங்களுடன் அவர்களுக்கு உள்ள தொடர்பு பற்றியும் விசாரணை நடந்து வருகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com