

கேரள மாநிலம் காசர்கேடு மற்றும் பாலக்காடு பகுதிகளில் 4,600 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த ஏலக்காய் தேட்டத்தில், எண்டேசல்பான் என்ற பூச்சிக்கெல்லி மருந்து கடந்த 1970 முதல் 2011 ஆம் ஆண்டு வரை (ஆண்டுக்கு 3 முறை) வான்வழியாக தெளிக்கப்பட்டது. அளவுக்கு அதிகமாக தெளிக்கப்பட்ட இந்த பூச்சிக்கெல்லி மருந்தால் பெரும் பாதிப்பு நேரிட்டது. அங்குள்ள நீராதாரங்கள் பாதிக்கப்பட்டது. யானைகள் மறைய ஆரம்பித்தன. மான், கரடி, குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் செத்து மடியத் தொடங்கின. குழந்தைகள் மட்டும் ஊனத்துடன் பிறக்கவில்லை. கால்நடைகள் கூட ஊனத்துடன் பிறக்க ஆரம்பித்தன.
மருந்து தெளிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்தனர். இதையடுத்து, எண்டேசல்பான் பூச்சிக்கெல்லி மருந்துக்கு கடந்த 2011, மே 13-ம் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும்படி கேரள அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது. கேரள அரசும் அதை ஏற்றுக்கொண்டு நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கை வெளியிட்டது. இருப்பினும் நிவாரணம் வழங்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் 2017 ஜனவரியில் நிதி நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது. இப்போதும் மக்களுக்கு உதவிகள் சென்றடையவில்லை. இந்நிலையில் மருந்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய்மார்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.
கேரள தலைமை செயலகம் வெளியே பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய்மார்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என போராடும் அவர்கள், நிதியுதவி, மருத்துவ உதவி மற்றும் பாதிக்கப்பட்ட எங்களுடைய குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளிகள், இதுபோன்ற கொடூரமான விளைவை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக வழக்கை முன்னெடுக்க தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாத வரையில் இங்கிருந்து திரும்ப மாட்டோம் என்று கூறியுள்ளனர்.