

ஜபல்பூர்
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் நர்மதா ஆற்றின் மீது பார்கி அணை கட்டப்பட்டு உள்ளது. கோடை கால விடுமுறை விடப்பட்ட நிலையில், பொழுதுபோக்கும் வகையில் படகு சவாரி செய்வதற்காக, 40 பேர் வரையிலான சுற்றுலாவாசிகள் கடந்த ஏப்ரல் 30-ந்தேதி இந்த அணைக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் மத்திய பிரதேச சுற்றுலா துறை சார்பில் இயக்கப்பட்ட படகில், அணையில் பயணித்து உள்ளனர். அப்போது பலத்த காற்று வீசியதில், படகு கவிழ்ந்தது. இதில், படகில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட பலரும் நீரில் மூழ்கினர். அவர்களில் 18 பேர் பலத்த முயற்சிக்கு பின்னர் மீட்கப்பட்டனர்.
எனினும், இந்த விபத்தில் சிக்கி 9 பேர் பலியானார்கள். விபத்தில் சிக்கிய பலரை காணவில்லை. அவர்களை கண்டறியும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. படகு விபத்தில் சிக்கியதும், கடைசி முயற்சியாக மகனை பாதுகாப்பதற்காக அவனை இறுக கட்டியணைத்தபடி, உயிர் காக்கும் கவசத்துடன் இருப்பது போன்ற அந்த புகைப்படம் கல்நெஞ்சையும் கரைய செய்யும்.
வாட்ஸ்அப் குழுக்கள், பேஸ்புக் பதிவுகள் மற்றும் எக்ஸ் பதிவுகளில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வரும் சூழலில், மனித உயிரை விலையாக கொண்ட பேரிடரின் அடையாளம் என பலரும் கூறி வரும் நிலையில், அதனை போலியானது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுபற்றி ஜபல்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட பதிவில், பார்கி அணை விபத்துக்கும் இந்த புகைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவிக்கின்றது. ஜபல்பூர் மாவட்ட கலெக்டரின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பதிவில், இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவால் (ஏ.ஐ.) உருவாக்கப்பட்டு இருக்கும். அல்லது வேறு இடத்தில் எடுக்கப்பட்ட ஒன்றாக இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.