முதல்வர் பதவி பஞ்சாயத்து முடிந்த நிலையில் அமைச்சர் பதவிக்கு போட்டி : காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி

முதல்வர் பதவிக்கான பஞ்சாயத்து முடிந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் அமைச்சர் பதவிக்கான போட்டி காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் பதவி பஞ்சாயத்து முடிந்த நிலையில் அமைச்சர் பதவிக்கு போட்டி : காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி
Published on

புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சி வசம் இருந்த ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சியை பிடித்தாலும் முதல்வர் பதவி தொடர்பான காங்கிரஸ் தலைவர்களின் போட்டி காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. தலைவர்களை அழைத்து பேசி கட்சி தலைமை முதல்வர்களை நியமனம் செய்தது. மூன்று மாநிலங்களிலும் பல்வேறு கோஷ்டிகள் உள்ள நிலையில் அமைச்சர் பதவி விவகாரமும் பெரும் சவாலாக இருக்கும் என்றே பார்க்கப்பட்டது.

மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் முதல்வர் பதவிக்கு கமல்நாத் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியாவும் களத்தில் இருந்தனர். ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்தி கமல்நாத்திற்கு பதவியை கொடுத்தார். பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, சுயேட்சைகள் உதவியுடன் ஆட்சியில் அமர்ந்துள்ள காங்கிரசுக்கு போட்டியாக பா.ஜனதாவும் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக உள்ளது. இந்நிலையில் அமைச்சர்கள் யார்? என்பதில் கமல்நாத்திற்கு சவால் ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் ஜோதிராதித்ய சிந்தியா, திக்விஜய் சிங், சுரேஷ் பச்சோரி, அருண் யாதவ், விவேக் தாங்கே, மீனாட்சி நடராஜன், அஜய் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உள்ளனர். இவர்களுடைய ஆதரவாளர்கள் அமைச்சர் பதவி கோரிக்கையை எழுப்பியுள்ளனர். கட்சித் தலைமைக்கும், முதல்வர் கமல்நாத்திற்கும் இதுதொடர்பான கோரிக்கைகள் சென்ற வண்ணம் உள்ளது.

இதற்கிடையே ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். அவருக்கே மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பையும் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மாநிலத்தில் காங்கிரஸை ஆட்சியில் அமர்த்துவதில் ஜோதிராதித்ய சிந்தியாவின் பணி மிகவும் முக்கியத்துவம் பெற்றது. ஒவ்வொரு தொகுதியாக சென்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். இந்நிலையில் அமைச்சர் பதவி யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக கமல்நாத் தவித்து வருகிறார். இதற்கிடையே கமல்நாத்தை, ஜோதிராதித்ய சிந்தியா சந்தித்து பேசியுள்ளார். இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் பஞ்சாயத்து மீண்டும் தலைமையிடம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com