ம.பி.: படகு விபத்துக்கு முன் பயணிகளின் நிலை... அதிர்ச்சி வீடியோ வெளியீடு - உஷாராகுமா அரசு?

உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில், யமுனை ஆற்றில் சுற்றுலாவாசிகளுடன் சென்ற படகு விபத்தில் சிக்கியதில் 15 பேர் பலியானார்கள்.

ம.பி.:  படகு விபத்துக்கு முன் பயணிகளின் நிலை... அதிர்ச்சி வீடியோ வெளியீடு - உஷாராகுமா அரசு?
Published on

ஜபல்பூர்

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் நர்மதா ஆற்றின் மீது பார்கி அணை கட்டப்பட்டு உள்ளது. கோடை கால விடுமுறை விடப்பட்ட நிலையில், பொழுதுபோக்கும் வகையில் படகு சவாரி செய்வதற்காக, சுற்றுலாவாசிகள் சிலர் கடந்த ஏப்ரல் 30-ந்தேதி இந்த அணைக்கு சென்றுள்ளனர்.

அவர்கள் மத்திய பிரதேச சுற்றுலா துறை சார்பில் இயக்கப்பட்ட படகில், அணையில் பயணித்து உள்ளனர். அப்போது பலத்த காற்று வீசியதில், படகு கவிழ்ந்தது. இதில், படகில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட பலரும் நீரில் மூழ்க தொடங்கினர். அவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சியில், 18 பேர் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு, முதல்-மந்திரி மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்ததுடன், மீட்பு பணிகளை விரைவுப்படுத்தும்படி அதிகாரிகளிடம் கேட்டு கொண்டார்.

உத்தர பிரதேச படகு விபத்து
உத்தர பிரதேச படகு விபத்து

பொதுப்பணி துறை மந்திரி ராகேஷ் சிங், சுற்றுலா மந்திரி தர்மேந்திர சிங் லோதி, மூத்த அதிகாரிகள், போலீசார் மீட்பு பணியை பார்வையிட சென்றனர். எனினும் விபத்தில் சிக்கி 4 பேர் பலியானார்கள். இந்த பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்து உள்ளது. விபத்தில் சிக்கிய பலரை காணவில்லை. அவர்களை கண்டறியும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில், படகு விபத்தில் சிக்கியது பற்றி அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. படகில் 30 சுற்றுலாவாசிகள் இருந்துள்ளனர். கூடுதலான பயணிகள் படகில் ஏற்றப்பட்டு உள்ளனர் என தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

படகில் பயணித்த சுற்றுலாவாசிகளுக்கு முதலிலேயே உயிர் காக்கும் கவச உடைகள் வழங்கப்படவில்லை. திடீரென ஏற்பட்ட புயல் மற்றும் பலத்த காற்று வீச்சு ஆகியவற்றால் படகு விபத்தில் சிக்கி தள்ளாடியது. அப்போதும், படகில் இருந்தவர்கள் உஷாராகவில்லை.

படகை திரும்ப வரும்படி விடுத்த எச்சரிக்கையை படகோட்டிகள் அலட்சியப்படுத்தி உள்ளனர். படகில் நீர் புகுந்து ஆபத்து உணரப்பட்டபோதே, உயிர் காக்கும் கவச உடைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையையும் புறக்கணித்து உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

படகு விபத்தில் சிக்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சுற்றுலாவாசிகள் படகில் சவாரி செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி உள்ளது. ஆனால், அதில் பயணித்தவர்கள் யாரும் உயிர் காக்கும் கவச உடைகளை அணிந்திருக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் அரசு சார்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தில், பெரிய அளவிலான அலட்சியம் உள்ளிட்ட விசயங்கள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

எனினும், சுற்றுலாவாசிகளின் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வு தொடர்பான விசயங்களில் தீவிர கேள்விகளை இந்த விபத்து சம்பவம், எழுப்பியுள்ளது. இதற்கு முன்பு, கடந்த ஏப்ரல் 2-ம் வாரத்தில் உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில், யமுனை ஆற்றில் இதுபோன்று படகு ஒன்று சுற்றுலாவாசிகளுடன் சென்றது.

அப்போது படகு விபத்தில் சிக்கியதில் 15 பேர் பலியானார்கள். அப்போதும், படகில் இருந்த சுற்றுலாவாசிகள் யாரும் உயிர் காக்கும் கவச உடைகளை முறைப்படி அணிந்திருக்கவில்லை. ஒரு மாதத்திற்குள் மற்றொரு சுற்றுலா படகு விபத்தில் சிக்கி மற்றொரு அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டு உள்ளது. அதனால், இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடக்காமல், அரசு உஷாராக நடந்து கொண்டு, சுற்றுலாவாசிகளை பாதுகாக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com