மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதே காங்கிரசின் முதல் பணி - ராகுல் காந்தி

மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதே காங்கிரசின் முதல் பணி என கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் உறுதிபட தெரிவித்து உள்ளார்.
மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதே காங்கிரசின் முதல் பணி - ராகுல் காந்தி
Published on

மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள தவறினால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் அது நடத்தப்படும் எனக்கூறி வருகிறார். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் ஷாஜபூரில் நேற்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், இந்த விவகாரத்தை மீண்டும் உறுதிபட தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மகளிர் இடஒதுக்கீடு

மத்திய அரசின் மகளிர் இடஒதுக்கீடு ஒரு சிறந்த நடவடிக்கை. ஆனால் அதில் பா.ஜனதா சேர்த்துள்ள, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகிய 2 சிறிய வரிகளை அழிக்க வேண்டும்.

இல்லையென்றால், மகளிர் இடஒதுக்கீட்டை 10 ஆண்டுகளுக்கு நிறைவேற்ற முடியாது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓ.பி.சி.) ஒதுக்கீடு இல்லாமல், இந்த மசோதா முழுமையற்றதாக உள்ளது.

ஓ.பி.சி. பிரிவினருக்காக பாடுபடுவதாக பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் சட்டத்தை இயற்றும் முன் எந்த பா.ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டதா? என்று கேளுங்கள், அவர்கள் எதிர்மறையாக பதிலளிப்பார்கள்.

நாட்டில் சட்டங்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். மூலம் உருவாக்கப்படுகிறது. 90 உயர் அதிகாரிகளால் நாடு இயக்கப்பட்டு வருகிறது. இதில் இதர பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை என்ன?

சாதிவாரி கணக்கெடுப்பு

இந்திய மக்கள்தொகையில் ஓ.பி.சி. பிரிவினர் பாதியளவு இருந்தாலும், இந்த அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே அந்த பிரிவைச் சேர்ந்தவர்கள். 3 ஆண்டுகளுக்கு முன்பு அதுவும் பூஜ்ஜியமாக இருந்தது.

பிரதமர் மோடி தலித், பழங்குடியினர், ஓ.பி.சி. பிரிவினருக்காக உழைக்கவில்லை. வெறுமனே உங்கள் கவனத்தை ஈர்க்கிறார். உண்மை என்னவென்றால் வெறும் 5 சதவீத பட்ஜெட்டையே இந்த ஓ.பி.சி. அதிகாரிகள் கட்டுப்படுத்துகிறார்கள். நான் இந்தக் கேள்வியை எழுப்பும்போது, பா.ஜனதா நடுங்குகிறது. பிரதமர் மோடி ஓடிவிடுகிறார், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு மந்திரி அமித்ஷா தவிர்க்கிறார்.

நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் சரியான எண்ணிக்கையை அறிந்து கொள்ள, சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.எனவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதே எங்கள் முதல் பணியாக இருக்கும்.

ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டம்

ஆர்.எஸ்.எஸ்.சின் செயல்திட்டமான வெறுப்பையும், வன்முறையையும் பரப்புவதே பிரதமர் மோடியின் பணியாக இருக்கிறது. கோட்சேவுக்கு எதிராக காந்திஜி அணிவகுத்து நிற்கிறார். பாசமும் சகோதரத்துவமும் ஆணவத்துக்கு எதிராக உள்ளன. இது ஒரு சித்தாந்தங்களின் மோதல் ஆகும். ஒருபுறம் காங்கிரசும், மறுபுறம் ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதாவும் நிற்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக நான் பேசக்கூடாது என்பதற்காக எனது மக்களவை உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், உள்கட்டமைப்பு மற்றும் நெல் குடோன்கள் என நீங்கள் எங்கு பார்த்தாலும் அதானியைக் காண்பீர்கள்.

ஒவ்வொரு நாளும், விவசாயிகளின் பாக்கெட்டில் இருந்து பணம் ஓரிரு தொழிலதிபர்களுக்கு செல்கிறது. எந்தவொரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது ஒருசில வணிக அதிபர்களுக்காக மட்டும் அரசு செயல்படக்கூடாது.

இவ்வாறு ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com