பிரக்யா தாகூருக்கு எதிரான 12 வருட பழமையான கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க மத்திய பிரதேச அரசு முடிவு

போபால் மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பிரக்யா சிங் தாகூருக்கு எதிரான 12 வருட பழமையான கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
பிரக்யா தாகூருக்கு எதிரான 12 வருட பழமையான கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க மத்திய பிரதேச அரசு முடிவு
Published on

போபால்,

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் உறுப்பினராக இருந்தவர் சுனில் ஜோஷி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரது கொலை வழக்கில் தொடர்புடையவர் என இவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. ஆனால் ஜோஷி கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார்.

இந்நிலையில், குருஜி என அழைக்கப்பட்டு வந்த ஜோஷி கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 29ந்தேதி திவாஸ் நகரில் சுனா கதன் பகுதியில் பைக்கில் வந்த மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பிரக்யா சிங் தாகூர் மற்றும் 7 பேர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. எனினும், கடந்த 2017ம் ஆண்டில் போதிய சான்றுகள் இல்லை என கூறி இவர்கள் அனைவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். கடந்த 2008ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான பிரக்யா சிங் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போபால் மக்களவை தொகுதி வேட்பாளராக சாத்வி பிரக்யா என அழைக்கப்படும் பிரக்யா சிங் தாகூரை பா.ஜ.க. நிறுத்தியது. இறுதி கட்ட தேர்தல் கடந்த ஞாயிற்று கிழமை நடந்து முடிந்தது. இதன்பின்பு வெளியான கருத்து கணிப்புகளில் அவர் வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு, ஜோஷி கொலை வழக்கை மீண்டும் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது. இதனை மத்திய பிரதேச சட்ட துறை மந்திரி பி.சி. சர்மா இன்று தெரிவித்து உள்ளார். இதன்படி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என கூறிய அவர், இந்த வழக்கு பற்றிய அறிக்கை ஒன்றை அளிக்கும்படி திவாஸ் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com