நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை....! மின் தடையால் மாறிய மணப்பெண்கள்

மத்திய பிரதேசத்தில் மின் தடையால் மணமகன்கள் மணப்பெண்களை மாற்றி திருமணம் செய்ததால் குளறுபடி ஏற்பட்டது.
Image Courtesy: Shutterstock/Representative Image
Image Courtesy: Shutterstock/Representative Image
Published on

போபால்

நாடு முழுவதும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெயில் சுட்டெரிப்பதால் மின் தேவை அதிகரித்து இருக்கிறது. இதனால் அடிக்கடி மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இந்த மின் வெட்டால் திருமணத்தில் மணமக்களே மாறிய சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி நகரை சேர்ந்த ரமேஷ் லால் என்பவருக்கு நிகிதா, கரிஷ்மா ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று ரமேஷ் ஆசைப்பட்டார். அவரின் ஆசைப்படி இரு வேறு குடும்பங்களை சேர்ந்த கணேஷ், தங்க்வாரா ஆகிய இரண்டு மணமகன்கள் கிடைத்தனர். இதையடுத்து இரண்டு பெண்களுக்கும் ஒரே மேடையில் திருமணத்திற்கு ரமேஷ் ஏற்பாடு செய்திருந்தார்.

திருமணத்தின் போது மணப்பெண்கள் தலையில் முக்காடு போட்டு மூடி இருந்தனர். அதோடு இரண்டு பெண்களும் ஒரே மாதிரியான ஆடைகள் அணிந்திருந்தனர். திருமண சடங்கு முழுவேகத்தில் நடந்து கொண்டிருந்த போது திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் திருமண சடங்குகள் நடைபெறும் போது இருட்டில் மணப்பெண்கள் மாறிவிட்டனர்.

அக்னியை சுற்றி வரும்போது கூட பண்டிதரும் இதனை கவனிக்காமல் மணப்பெண்களை மாற்றி சுற்றி வரும் படி செய்துவிட்டார். திருமணம் முடிந்து இரு பெண்களும் தங்களது கணவன் வீட்டிற்கு சென்ற பிறகுதான் தாங்கள் போட்டு இருந்த முக்காடை அகற்றினர். முக்காடை அகற்றியதும் மணமகனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

நான் இந்த பெண்ணை பார்க்கவில்லையே எப்படி மணப்பெண் மாறியது என்று கேட்டு பெண் வீட்டாருடன் சண்டை போட்டார். இறுதியில் மின் தடையால் மணப்பெண் மாறிவிட்டதை இரு மாப்பிள்ளைக்கும் சொல்லி சமாதானப்படுத்துவதற்குள் பெண் வீட்டாருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

இது குறித்து திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதரிடம் கூறிய போது மீண்டும் ஒரு முறை சடங்கை நடத்திவிடலாம் என்று கூறி மீண்டும் திருமண சடங்கை நடத்தி வைத்தார். இத்திருமணத்தால் ஒரே குழப்பம் ஏற்பட்டு பின்னர் சமாதானத்தில் முடிவடைந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com