

ஜபல்பூர்,
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் லாரி உரிமையாளராக இருப்பவர் குட்டு சர்மா. இவரது உதவியாளர் ஷேரு (வயது 40). குட்டுவிடம் சுரேஷ் கோண்டு (வயது 46), ஆஷிஷ் கோண்டு (வயது 24) மற்றும் கோலு கோண்டு (வயது 23) ஆகிய 3 பேர் ஊழியர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். பழங்குடியினத்தினை சேர்ந்த அவர்கள் லாரி ஓட்டுநர்களாகவும் மற்றும் கிளீனர்களாகவும் இருந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 11ந்தேதி இரவு தனது லாரிகளில் இருந்து 120 லிட்டர் டீசலை திருடி விட்டனர் என 3 பேர் மீதும் குட்டு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
தொடர்ந்து அந்த 3 பேரின் உடைகளையும் உதவியாளர் ஷேரு உதவியுடன் களைய செய்துள்ளார். அதன்பின்னர் அவர்கள் 3 பேரையும் கடையின் கதவை மூடிவிட்டு அதனை நோக்கியபடி நிற்க வைத்துள்ளார்.
அவர்களை பேஸ்பால் பேட் மற்றும் பிளாஸ்டிக் பைப் ஆகியவற்றை கொண்டு 2 பேரும் அடித்து உள்ளனர்.
இதுபற்றி எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. 3 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.