எம்.பி.க்கள் சம்பள குறைப்பு மசோதா தாக்கல்

எம்.பி.க்கள் சம்பளத்தை ஓராண்டுக்கு குறைப்பதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
எம்.பி.க்கள் சம்பள குறைப்பு மசோதா தாக்கல்
Published on

புதுடெல்லி,

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான செலவுக்காக, எம்.பி.க்கள் சம்பளம் 30 சதவீதம் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதற்கான அவசர சட்டம், கடந்த ஏப்ரல் 7-ந் தேதி கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், அந்த அவசர சட்டத்துக்கு பதிலாக, நேற்று நாடாளுமன்ற மக்களவையில் எம்.பி.க்கள் சம்பளம், இதர படிகள், ஓய்வூதியம் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தாக்கல் செய்தார்.

இதன்படி, இன்னும் ஓராண்டு காலத்துக்கு எம்.பி.க்கள் சம்பளம் 30 சதவீதம் குறைக்கப்படும்.

வேளாண் துறை தொடர்பான 3 அவசர சட்டங்கள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு இருந்தன. அவற்றுக்கு மாற்றாக, 2 மசோதாக்களை மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமரும், ஒரு மசோதாவை மத்திய உணவுத்துறை இணை மந்திரி ராவ்சாகேப் தன்வேவும் மக்களவையில் தாக்கல் செய்தனர்.

இந்த மசோதாக்கள், கூட்டாட்சி முறைக்கு விரோதமானவை என்று காங்கிரசை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சசி தரூர், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த சவுகதா ராய் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதற்கு பதில் அளித்து, வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறியதாவது:-

இந்த மசோதாக்கள், விவசாயிகள் தடையற்ற வர்த்தகத்தில் ஈடுபட வழிவகுக்கிறது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தாலும், பெரும்பாலான விவசாயிகள் பலன் அடைவதில்லை.

எனவே, இந்த மசோதாக்களின்படி, விவசாய மண்டியை தவிர்த்து, வேறு இடங்களிலும் விவசாயிகள் விற்கலாம். தாங்கள் விருப்பப்பட்ட முதலீட்டாளர்களிடம் விலை பேசலாம். இதன் மூலம் விவசாயிகள் பலன் அடைவார்கள். அதே சமயத்தில், குறைந்தபட்ச ஆதார விலை முறையும் நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com