ரிலையன்ஸ் ஜியோவின் புதிய தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நியமனம்!

முகேஷ் அம்பானி அந்நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவை பிரிவான 'ரிலையன்ஸ் ஜியோ’ இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார்.
ரிலையன்ஸ் ஜியோவின் புதிய தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நியமனம்!
Published on

மும்பை,

உலகின் மாபெரும் கோடீஸ்வரராக திகழும் இந்தியாவின் ரிலையன்ஸ் குழும தலைவரான முகேஷ் அம்பானி அந்நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவை பிரிவான 'ரிலையன்ஸ் ஜியோ' இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோவின் தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று நடைபெற்ற குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முன்னதாக, முகேஷ் அம்பானி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். எனினும்,அனைத்து ஜியோ டிஜிட்டல் சேவை பிராண்டுகளுக்கும் சொந்தமான முதன்மை நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட்டின் தலைவராக முகேஷ் அம்பானி தொடர்ந்து இருப்பார்.

மேலும், ரிலையன்ஸ் ஜியோவின் நிர்வாக இயக்குநராக பங்கஜ் மோகன் பவாரை ஐந்தாண்டு காலத்திற்கு நியமிப்பதற்கும் இன்று நடைபெற்ற குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ரமிந்தர் சிங் குஜ்ரால் மற்றும் கே.வி. சவுத்ரி, ஆகியோர் நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர்களாக பொறுப்பேற்றார்கள்.

மறுபுறம், ரிலையன்ஸ் ஜியோவின் இயக்குனராகவும் ஆகாஷ் அம்பானி செயல்படுவார். கடந்த 2017இல் இந்தியாவை மையமாகக் கொண்ட ஜியோ போனைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவதில் பொறியாளர்கள் குழுவுடன் ஆகாஷ் அம்பானி நெருக்கமாக ஈடுபட்டார். அதன்பின், ஜியோ போன் பெரும்பாலான இந்தியர்களை 2ஜி சேவையில் இருந்து 4ஜிக்கு அழைத்துச் செல்லும் ஒரு புரட்சிகரமான சாதனமாக மாறியது. இந்த போன் புரட்சிக்கு பின்புலம் ஆக ஆகாஷ் இருந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சமீபத்திய டிராய்(தொலைத் தொடர்புத்துறை ஒழுங்கு ஆணையம்) தரவுகளின்படி, ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் மாதத்தில் 16.8 லட்சம் மொபைல் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது. அதற்கு அடுத்த இடத்தில், பார்தி ஏர்டெல் 8.1 லட்சம் பயனர்களை சேர்த்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், தொடர்ந்து இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக ஜியோ நீடிக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com