

புதுடெல்லி,
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத்தலைவராக இருந்தவரும், அந்த கட்சியின் டெல்லி மேல்சபை உறுப்பினருமான முகுல் ராய், கடந்த செப்டம்பர் மாதம் அந்த கட்சியில் இருந்து விலகினார். பின்னர் அவர் தனது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். கட்சித்தலைவர் மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட அதிருப்தியால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய அவர் பா.ஜனதாவில் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே நேற்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் மற்றும் பா.ஜனதா தேசிய செயலாளரும், மேற்கு வங்காள பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியா ஆகியோர் முன்னிலையில் அவர் பா.ஜனதாவில் இணைந்தார்.
முகுல் ராயை வரவேற்று பேசிய ரவிசங்கர் பிரசாத், மாநிலத்தில் பா.ஜனதாவின் தளத்தை விரிவுபடுத்த ராயின் அனுபவம் உதவியாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் முகுல் ராய் எந்தவித நிபந்தனையும் இன்றி கட்சியில் இணைந்ததாகவும் அவர் கூறினார்.மம்தா பானர்ஜியின் வலது கரம் போல திகழ்ந்த முகுல் ராய், பா.ஜனதாவில் இணைந்திருப்பது திரிணாமுல் காங்கிரசுக்கு இழப்பு என கருதப்படுகிறது.