

மோதல் போக்கு
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான முகுல் ராய் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தவர். டெல்லி மேல்-சபை எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார்.
முன்னாள் ரெயில்வே மந்திரியான இவருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் தலைமை பொதுச் செயலாளரும், மாநில கல்வி மந்திரியுமான பார்த்தா சாட்டர்ஜிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு நீடித்து வந்தது.
முகுல் ராயின் மகனும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சப்ரங்சூ ராய் வகித்து வந்த முக்கிய பதவிகளை பார்த்தா சாட்டர்ஜி பறித்துவிட்டதாகவும், அவரை கடுமையாக விமர்சித்தாகவும் கூறப்படுகிறது.
விலகப்போவதாக அறிவிப்பு
இந்த நிலையில், முகுல் ராய் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து நேற்று திடீரென ராஜினாமா செய்தார். மேலும், டெல்லி மேல்-சபை எம்.பி. மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் விலகப் போவதாக அறிவித்தார்.
இதுபற்றி அவர் கொல்கத்தாவில் நிருபர்களிடம் கூறுகையில், கட்சியின் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து கனத்த மனதுடன் விலகுகிறேன். துர்கா பூஜைக்கு பிறகு டெல்லி மேல்-சபை எம்.பி. மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்வேன். அப்போது இதற்கான காரணத்தை விரிவாக தெரிவிப்வேன் என்றார்.
அப்போது, திரிணாமுல் காங்கிரசில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட டெல்லி மேல்-சபை எம்.பி. குணால் கோசும் உடன் இருந்தார்.
இடை நீக்கம்
இந்த நிலையில் முகுல் ராயை திரிணாமுல் காங்கிரசில் இருந்து 6 ஆண்டுகளுக்கு இடை நீக்கம் செய்வதாக பார்த்தா சாட்டர்ஜி அறிவித்தார்.
அவர் கூறுகையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் முகுல்ராய் ஈடுபட்டுள்ளார். அவருடைய செயல்கள் கட்சியை பலவீனப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. எனவே, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி இந்த முடிவை எடுத்துள்ளது. அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி தலைவர் மம்தா பானர்ஜியை கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.
இதற்கிடையே, முகுல் ராய் பா.ஜனதாவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.