பா.ஜனதாவுக்கு எதிராக முலாயம், லல்லு, சரத்யாதவ் உருவாக்கும் புதிய கூட்டணி

பாரதீய ஜனதாவிற்கு எதிராக முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
பா.ஜனதாவுக்கு எதிராக முலாயம், லல்லு, சரத்யாதவ் உருவாக்கும் புதிய கூட்டணி
Published on

லக்னோ,

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதாவின் அசுர வளர்ச்சியால் முலாயம்சிங் யாதவ் கட்சிக்கு செல்வாக்கு மங்கியது. அவரது கட்சி 2ஆக உடைந்ததுடன் மகன் அகிலேஷ் யாதவ் ஆட்சியை இழந்தார். இதே போல் பீகாரில் லல்லு பிரசாத் யாதவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ்குமார் பா.ஜனதாவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தார். இதனால் லல்லு பிரசாத் யாதவ் தனித்து விடப்பட்டார்.

மகா கூட்டணியை உடைத்து பாரதீய ஜனதாவுடன் கூட்டணி என்ற நிதிஷ்குமார் முடிவால் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ் அதிருப்தி அடைந்து தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார்.

இவ்விவகாரத்தில் நிதிஷ் குமாருக்கு எதிராக இறங்க ஏற்கனவே லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவை கேட்டுக் கொண்டார். சரத் யாதவும் டெல்லியில் முலாயம் சிங் யாதவுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அப்போது ஷிவ்பால் யாதவும் உடன் இருந்தார்.

இந்த 3 தலைவர்களும் யாதவர் பிரிவைச் சேர்ந்தவர்கள். பீகார், உத்தரப் பிரதேசத்தில் யாதவர்கள் கணிசமான அளவில் உள்ளனர். எனவே அவர்களது வாக்குகளை ஒன்று திரட்டும் வகையில் புதிய கூட்டணியை உருவாக்க முலாயம்சிங் யாதவ், லல்லுபிரசாத் யாதவ், சரத்யாதவ் ஆகியோர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். பா.ஜனதாவுக்கு எதிராக இந்த கூட்டணியை உருவாக்கவும் முடிவு செய்துள்ளனர். தனியாக கூட்டணியை உருவாக்கும் இவர்கள் காங்கிரசுடன் இணைந்து பா.ஜனதாவுக்கு எதிராக இறங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

காங்கிரசுடன் கைகோர்ப்பது என்பதில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் சரத் யாதவ் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் இப்போது பா.ஜனதாவுடன் நெருக்கம் காட்டும் முலாயம் சிங் யாதவ் தயக்கம் காட்டுகிறார் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com